
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில்,மதுராந்தகம்,தாராபுரம்,அம்பாசமுத்திரம்,பெருந்துறை, கரூர்,விராலிமலை ஆகிய தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த ஆற் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டுவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இவற்றில்,தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம் பெருந்துறை,கரூர்,விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால்,மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் இடைத்தேர்தலுக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் தாக்கல் செய்த மனுவில்,தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
எனவே,இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது,தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால்,பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.இந்தச் செலவுகளுக்கு அவர்களைப் பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்கவேண்டும்.தேர்தல் முடிவுகள் வெளியான குறுகியகாலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யவேண்டும்.
இந்த வழக்கு முடியும்வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கவேண்டும்.இந்தத் தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கவேண்டும்.அதேபோல,திருச்சி கிழக்கு,கரூர்,விராலிமலை,பெருந்துறை,அம்பாசமுத்திரம்,மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தவழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்,மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.ஆனால், இதுபோல நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது.இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்.குறுகியகாலத்தில் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சி சார்பில் அதேதொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யவேண்டும்.இதைத்தடுக்க இதுவரை எந்த வழிமுறைகளும் இல்லை.சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதிக்கமுடியாது.
ஏற்கனவே,இதேபோல் தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்ப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


