
முதல்வர் விஜய் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து இலண்டன் புறப்பட்டுச் சென்றார்.தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பயணம் என்று அறிவிக்கப்பட்டபோதும்,முதல்வர் விஜய் நடிகர் அஜித் பங்கேற்ற கார்பந்தயத்தை தொடங்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில்,இலண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தனது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.11,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், இங்கிலாந்தை சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனம் சென்னையின் மவுண்ட் பூந்தமல்லி சாலை ‘ஜிசிசி காரிடார்’ பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் உலகளாவிய திறன் மையம் அமைக்க உள்ளது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுவீடனை சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், சென்னை மற்றும் திருச்சியில் தனது திறன் மையங்களை விரிவுபடுத்தி 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், சம்வர்தனா மதர்சன் நிறுவனத்துக்கும் தமிழகத்துக்கும் தொழில் உறவு தற்போது உருவானது அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
மதர்சன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முகவரி பட்டியலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 32 முகவரிகளில் தொழிற்சாலைகள் இருப்பதாக இடம்பெற்றுள்ளன. ஒரகடம் தொழில் பூங்கா, ஸ்ரீபெரும்புதூர்,வல்லம் வடகால், ஊரப்பாக்கம், மறைமலைநகர்,வாலாஜாபாத், சோழிங்கநல்லூர், குருவன்மேடு,மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிறுவனத்தின் தொழில் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் அதன் அலுவலகப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மதர்சன் நிறுவனத்துடன் தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் முக்கியமான முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டு நிகழ்ச்சியில் ரூ.35,208 கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கான 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ரூ.3,928 கோடி மதிப்பிலான 10 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அவற்றில் காஞ்சிபுரத்தில் மதர்சன் ஆட்டோ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தொழில் பூங்காவும் இடம்பெற்றிருந்தது.
இது வெறும் அறிவிப்பாக மட்டுமின்றி திட்டம் தொடங்கப்பட்ட நிலைக்கும் சென்றிருந்தது.இதை தொடர்ந்து 2024ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் மதர்சன் குழுமம் தொடர்பான புதிய முதலீட்டு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம் சுமார் 2,200 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் மதர்சன் எலக்ட்ரானிக் காம்பொனென்ட்ஸ் நிறுவனம், மத்தியஅரசின் மின்னணு உதிரிபாக உற்பத்தித் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதி பெற்றதாக மதர்சன் நிறுவனம் அறிவித்தது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆலையில் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.1,900 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக ஆட்சிக்காலத்தில் இந்நிறுவனம் அறிவித்தது.
இதனால்,கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் மதர்சன் குழுமத்தின் முதலீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது தெளிவாகிறது. 2024ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.2,600 கோடி திட்டமும், 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.1,900 கோடி விரிவாக்க முதலீடும் தனித்தனி திட்டங்களாகும். மதர்சன் குழுமத்தின் தலைமை அலுவலகம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே மதர்சன் குழுமம் நிறுவனங்களின் பல்வேறு தொழில் சாலைகள் இயங்கி வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் தலைமையிடம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வருகிறது. இதனால், புதிய முதலீட்டு ஒப்பந்தத்துக்காக முதல்வர் விஜய் நேரடியாக லண்ட சென்று ஒப்பந்தம் மேற்கொண்டது ஏன் என்ற கேள்வி முக்கியமாக எழுந்துள்ளது.
இதேபோல் வில்சன் பவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சிக்காலத்திலேயே 2025 செப்டம்பரில் ரூ.300 கோடி முதலீட்டில் மின்மாற்றி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது; அப்போது 543 வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. சிக்மா டெக்னாலஜி குரூப் தற்போது சென்னை, திருச்சியை மையமாகக் கொண்டு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
எனவே,இலண்டனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முதலீடுகளில் எவை முற்றிலும் புதிய திட்டங்கள், எவை ஏற்கனவே திமுக ஆட்சியில் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சி அல்லது விரிவாக்கம் என்பதையும், ஒவ்வொரு நிறுவனத்துடனும் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, முதலீட்டுத் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் இதுவரை செயல்பாட்டுக்கு வந்த திட்டங்கள் குறித்த முழு விவரங்களையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் துறை, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், இத்தகைய ஒப்பந்தத்தை தமிழகத்திலேயே நடத்த முடியாதா? லண்டனில் நிகழ்ச்சி நடத்துவதால் தமிழகத்திற்கு கிடைக்கும் கூடுதல் பொருளாதாரப் பலன் என்ன? லண்டன் பயணத்துக்கான அரசு செலவு எவ்வளவு? அந்தச் செலவுக்கும் தற்போதைய முதலீட்டுக்கும் நேரடி தொடர்பு என்ன? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே தொழில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுடன் புதிய முதலீட்டு ஒப்பந்தம் செய்வதற்காக முதல்வர் நேரடியாக லண்டன் சென்றிருக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழகத்திலேயே செயல்பட்டுவரும் அந்த நிறுவனங்களுடன் நிர்வாகத்துடன் சென்னையிலோ அல்லது தலைமைச் செயலகத்திலோ ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாதா? இதற்காக தனிப்பட்ட பயணத் திட்டம் தயாரித்து இலண்டன் சென்று ஒப்பந்தம் செய்திருப்பதன் உண்மையான நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும்,இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் மதர்சன் குழுமத்தின் நிர்வாகி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அப்படியிருக்கும்போது,தமிழக தொழில் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய துறை பிரதிநிதிகள் ஏன் பங்கேற்கவில்லை என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.முதலீடுகளை ஈர்ப்பது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது.
ஆனால்,ஏற்கனவே தமிழகத்தில் தொழில் செய்து வரும் நிறுவனங்களுடன் புதியமுதலீட்டு அறிவிப்புகளை அறிவித்து,அதை செய்தி வெளியீடு,விளம்பரம்,அரசு நிகழ்ச்சி மற்றும் சமூகவலைதள காட்சிகளுக்காக முதலீட்டு அறிவிப்புகள் நடத்தப்படுகிறதா அல்லது உண்மையில் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள், புதிய உற்பத்தி,புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கிறதா என்ற கேள்விக்கும் அரசு பதில் அளிக்கவேண்டும் என்றும் சமூகஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேபோல்,இலண்டன் பயணத்தின்போது முதல்வர் விஜய்யின் பிறநிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.குறிப்பாக,சில நிகழ்ச்சிகளுக்காக அரசுபணம் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே,மக்கள் பணம் செலவிடப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்துக்கும் தெளிவான பொருளாதாரப் பலன் என்ன என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


