
தமிழ்நாட்டில் மே 4 ஆம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியானது.அதில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த தவெக காங்கிரசு, விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால்,திருச்சி கிழக்கு தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.அதனால், அந்தத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக 25 சமஉக்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க தவெக பேரம் பேசியதாக அப்போது விமர்சனம் எழுந்தது.அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் மே 13 ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் அக்கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தார்.
அதனால்,தவெக அரசுக்கு வாக்களித்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்கள்.அவர்களின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மன்னித்துவிட்டதாக சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.அதனால் அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேநேரம்,மன்னிப்பு கடிதம் கொடுக்காத அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்),ஜெயக்குமார் (பெருந்துறை),இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களின் உறுப்பினர் பதவிவிலகல் கடிதத்தை சட்டப்பேரவையின் கீழ்தளத்தில் சபாநாயகரிடம் கொடுத்தவுடன்,மேல்தளத்தில் அமைச்சரை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.இது அப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் நான்கு பேரைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகியோரும் தங்களது பதவிகளை துறந்தனர்.பின்பு,தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு உள்பட மொத்தமாக தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்த தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக காலியாக உள்ள தொகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டிய சூழல் உள்ளது.ஆனால்,தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன.இதன் காரணமாக திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடைபட்டுள்ளது.
குறிப்பாக,திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.அதேபோல, எம்.ஆர்.விஜயபாஸ்கர்,சி.விஜயபாஸ்கர்,இசக்கி சுப்பையா,ஜெயக்குமார் ஆகியோர் தங்களது சமஉ பதவிகளை துறந்ததாலும்,அதற்கு முன்பாகவே அவர்களது வெற்றிக்கு எதிராக தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள், தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தொடர்ந்தனர்.
எனவே,இந்த 5 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து,பாஜக வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்தமனுவில்,ஏற்கனவே இந்த தொகுதிகளில் வென்ற வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது,அந்த தொகுதிகளை முழுமையான காலிப்பணியிடங்களாக கருதமுடியாது; நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே அங்கு அவசரமாக இடைத்தேர்தல் நடத்தினால் அது கடுமையான சட்டச்சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,தேர்தல் வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பாக,அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த அரசு பணம் செலவிடப்படுவதோடு,ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற அரசியல்சாசன பிரச்னை ஏற்படும் எனக்கூறி,திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க, செப்டம்பர் 8 ஆம் தேதி (இன்று) வரை தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம்,இந்தத் தடையை நீக்கக்கோரி முதலமைச்சர் விஜய் சார்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,திருச்சி கிழக்கு தொகுதியில், தான் பதவி விலகியபோது எந்த தேர்தல்வழக்கும் நிலுவையில் இல்லை என்றும்,அதன்பின்னரே வழக்கு தொடரப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும்,தொகுதிகள் நீண்டகாலமாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும்,உடனே இடைத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச்சூழலில்,தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில்,மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.
வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9 ஆம் தேதி (நாளை) தொடங்கும்.வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 16 கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும்.வேட்புமனுவை திரும்பப்பெற செப்டம்பர் 19 ஆம் தேதி கடைசிநாள்.தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.திமுக வேட்பாளர் டி.இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றார்.நோட்டோவுக்கு 1,058 வாக்குள் பதிவாகி இருந்தன.
மதுராந்தகத்தில் அதிமுகவின் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் 62,090 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.திமுக வேட்பாளர் எஸ்.அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.நாம் தமிழர் வேட்பாளர் ஜனகிராமன் 4,950 வாக்குகள் பெற்றார்.
தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகள் மட்டுமின்றி,மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜினகர் தொகுதிகளிலும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும், அசாமில் நாகான் மக்களவை தொகுதிக்கும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி பவானிபூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்ததோடு நந்திகிராம் தொகுதியிலும் வெற்றி பெற்றார். இதன்பின்,நந்திகிராம் தொகுதி உறுப்பினர் பொறுப்பை துறந்தார்.புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் வென்று தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.
எனவே,அங்கு அக்டோபர் 6 அன்று தேர்தல் நடக்கிறது.


