அன்பில்மகேஷ் மீது என்ன குற்றச்சாட்டு? – விவரம்

2021-26 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற திமுக ஆட்சியின்போது,தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு,டிடிசிபி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக,தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில்,சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த,தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த திமுக பிரமுகர் பி.டி.அரசகுமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக ஜூன் 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அரசகுமாரின் உறவினர்கள் ஆரோக்கியராஜ்,சுரேஷ் ஆகிய 2 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் உள்ளனர்.வழக்கு தொடர்பாக இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் ரூ.100 கோடிவரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தவழக்கில் 250 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வழக்கில் தொடர்புடையவர்களின் வங்கிக்கணக்குகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள், தலைமறைவாக உள்ள முத்துக்குமாருக்குத் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு,அவற்றில் நடைபெற்ற நிதிப்பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள்,அலுவலகங்கள்,பள்ளி வளாகங்களில் நடந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள்,செல்போன்கள்,கணினிகள்,ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்தவழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அன்பில் மகேஷ் தொடர்புடைய சென்னை தி.நகர்,பசுமை வழிச்சாலை ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் நேற்று சோதனை நடைபெற்றது.இதேபோல்,திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள அன்பில்மகேஷ் வீட்டில் நேற்று காலை 7.40 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.40 மணி வரை 8 மணி நேரம் உதவி ஆணையர் தலைமையிலான 20 காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அவரது வீட்டு வாசலில் நின்ற மகிழுந்திலும் சோதனை நடத்தினர்.அவருக்குச் சொந்தமாக விஸ்வாஸ் நகரில் உள்ள அபார்ட்மென்ட் வீடு,அதேபகுதியில் வேறு அபார்ட்மென்டில் உள்ள அவரது உதவியாளராக இருந்த அருண் வீடு,மகேஷின் நெருங்கிய உறவினர் வாளாடி கார்த்தியின் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தினர். இதில்,மோசடி தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அன்பில்மகேஷுக்குச் சொந்தமான சென்னையில் 2 இடங்கள்,திருச்சியில் 2 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது,சொத்து ஆவணங்கள்,வங்கி விவரங்கள்,காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு தொடர்பாக 118 ஆவணங்கள்,18 செல்போன்கள்,3 லேப்டாப்,8 பென்டிரைவ்,2 ஹார்டு டிஸ்க்,1 டேப்லெட்,1 ஆப்பிள் ஐபேட் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.

அன்பில்மகேஷ் வீடுகளில் சோதனை நடந்தது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்….

அன்பில்மகேஷ் வீடுகளில் சோதனை என்பது மற்றுமொரு திசை திருப்பும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தமிழகம் முழுவதும் மின்வெட்டு,மக்கள் போராட்டம்,மீனவர் போராட்டம்,ஆவின் பால் தட்டுப்பாடு,இராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் அரசுப்பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டு கொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்.எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்கமுடியாது.பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response