காலாண்டுத்தேர்வுகள் மற்றும் ஆயுசபூசை விடுமுறை குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு ஜூன் 27-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்திமுடிக்கப்பட்டன. நடப்பு கல்விஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது.

அதில், பள்ளி இயங்கும் நாட்கள், விடுமுறை விவரங்கள், காலாண்டு,அரையாண்டு, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மேலும், காலச் சூழலுக்கேற்ப தேதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது காலாண்டுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித் துறை உறுதிசெய்துள்ளது.

அதன்படி, 11, 12 ஆம் வகுப்புக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரையும், 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூசை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

மீண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதற்கான விரிவான காலஅட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு வழங்கப்படும். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Leave a Response