
தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகள்,ஊராட்சி ஒன்றியங்கள்,மாவட்ட ஊராட்சிகள்,பேரூராட்சிகள்,நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலைமையை ஆய்வு செய்து,மாநிலஅரசு வழங்கவேண்டிய நிதிப்பகிர்வு குறித்த பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 7 ஆவது மாநில நிதி ஆணையம் (State Finance Commission) அமைக்கப்பட்டுள்ளது.
ஏழாவது மாநில நிதிக்குழுவின் காலவரம்பை 31 டிசம்பர் 2026 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறை சார்பில்,அரசாணை (நிலை) எண் 139 வெளியிடப்பட்டதுடன்,தமிழ்நாடு அரசு சிறப்பு அரசிதழிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு,2025 மே 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிதித்துறையின் முந்தைய அரசிதழ் அறிவிக்கையில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.அரசாணையின்படி,முந்தைய அறிவிப்பில் இடம்பெற்றிருந்த 31 ஆகஸ்ட் 2026 என்ற காலக்கெடு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும்,31 டிசம்பர் 2026 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் ஏழாவது மாநில நிதிக்குழுவின் செயல்பாட்டு காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிக்குழு கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் வருவாய், செலவினம், நிதி ஆதாரங்கள், நிதி பகிர்வு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும் முக்கிய பொறுப்பை வகிக்கிறது.
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால்,மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை விரிவாக ஆய்வு செய்து,தேவையான தகவல்களைச் சேகரித்து,விரிவான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க நிதிக்குழுவுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது என தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் அறிவித்துள்ளார்.
இந்தப் பரிந்துரைகள் கிடைத்த பின்பே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.இதன் காலக்கெடு நான்கு மாதங்கள் தள்ளிப்போயிருப்பதன்மூலம்,உள்ளாட்சித் தேர்தல் இவ்வாண்டு இல்லை என்று முடிவாகிவிட்டது.


