நாடாளுமன்றத்திலேயே மாற்றிப் பேசிய மத்திய அரசு – அண்ணாமலை எதிர்ப்பு

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம்,கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை என நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு ‘வி த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது….

16.02.2018 அன்று,உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்பில்,கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த,காவிரிநதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம் (ஜூலை 27),மாநிலங்களவையில்,காவிரிநதி தொடர்பாக,மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்,அணைக்கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க,கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும்,மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீடு சட்டத்தின்படி,காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின்,(குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி,நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கமுடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில்,தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும்,நலன்களையும் புறக்கணித்து,மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது,கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில்,மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும்,ஒரே நிலைப்பாட்டிலும் செயல்படவேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு,
மத்திய அரசை வலியுறுத்துகிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response