பாஜக கோட்டையில் பெரும் ஓட்டை – பீகார் பரபரப்பு

பா.ஜ.கவின் அகில இந்திய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் நிதின் நபின்/இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.அப்படி இருக்கும்போதே பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வானார்.அதற்காக சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.அதைத்தொடர்ந்து அவரது சொந்த தொகுதியான பீகார் மாநிலம் பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி காலியானது.நிதின் நபின் தொடர்ந்து 20 ஆண்டுகள் இத்தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்.அவருக்கு முன் அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹா ​​10 ஆண்டுகள் இந்தத் தொகுதியை கைவசம் வைத்திருந்தார்.நிதின் நபின் குடும்பத்தினர் பாங்கிபூர் தொகுதி பீகாரில் பாஜவின் மிக வலிமையான கோட்டைகளில் ஒன்றாக மாற்றியிருந்தனர்.

இந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் 2025 இல் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியாமல் படுதோல்வி அடைந்த தேர்தல்வியூக நிபுணரும்,ஜன் சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் களம் இறங்கினார்.

பா.ஜ.க சார்பில் நீரஜ்குமார் சின்ஹா ​​மற்றும் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பில் ரேகா குமாரி ஆகியோர் போட்டியிட்டனர்.இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி அளித்த பிரசாந்த் கிஷோர் 19,246 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றார்.

2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு பாங்கிபூர் இடைத்தேர்தல் பிரசாந்த் கிஷோரின் அரசியல் சோதனைக்கான ஒரு வாக்கெடுப்பாக அமைந்தது.அதேசமயம் பாஜகவுக்கும் இது ஒரு முக்கியத் தேர்வாக இருந்தது.ஏனெனில்,பாஜகவைச் சேர்ந்த சம்ராட் சவுத்ரி பீகாரின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

பாங்கிபூர் தொகுதியில் கடந்த 35 ஆண்டுகளாகத் தங்கள் வசம் இருந்த ஆதிக்கத்தின் மூலம் இடைத்தேர்தலில் எளிதாக வெற்றிபெறலாம் என்று பாஜக முதலில் நம்பிக்கையுடன் இருந்தது.

முதலில் அபிஷேக்குமார் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.ஆனால் அவரது குடும்பத்தினர் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து,அவருக்குப் பதிலாக 32 வயதான கட்சியின் இளைஞரணித் தலைவர் நீரஜ்குமார் சின்ஹா ​​வேட்பாளராக மாற்றப்பட்டார்.பிரசாந்த் கிஷோரின் பரப்புரை வேகம் பெற்ற நிலையில்,வேட்பாளர் மாற்றம் பாஜகவின் பதற்றத்தை வெளிப்படுத்தியது.

பரப்புரையின் தொடக்கக்கட்டத்தில் பெரிதாக முன்னிலையில் இல்லாத பா.ஜ.க தலைவர் நிதின் நபின், நேரடியாகக் களத்தில் இறங்கினார்.பீகார் முதல்வர் சம்ராட் சவுத்ரியுடன் இணைந்து பாட்னா முழுவதும் வாகனப்பேரணிகளை நடத்தினார்.பரப்புரையின் கடைசிநாளில் முக்கிய கோவில்களுக்குச் சென்ற அவர்,வாக்குச்சாவடி அளவிலான தொண்டர்கள்,வட்ட உறுப்பினர்கள்,இளைஞரணித் தலைவர்கள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்களைச் சந்தித்து வாக்காளர்களைத் திரட்டும் பணிகளைத் துரிதப்படுத்தினார்.

ஒன்றிய அமைச்சர்கள்,மாநில அமைச்சர்கள்,முதல்வர் சம்ராட் சவுத்ரி,சிராக் பாஸ்வான்,ரவிசங்கர் பிரசாத், மனோஜ் திவாரி,ரவி கிஷன் மற்றும் முக்கிய சாதிப்பிரிவுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட சமூகத்தலைவர்கள் என சுமார் 40 நட்சத்திரப் பரப்புரையாளர்களை பாஜக களமிறக்கியது.இதில் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாரும் இணைந்து காணொலி வாயிலாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜூலை 28 அன்று பரப்புரை நிறைவடைந்து, ஜூலை 30 அன்று வாக்குப்பதிவு நடந்தது.

வாக்கு எண்ணிக்கையில்,பங்கிபூர் தொகுதியில் 64,151 வாக்குகள் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ்குமார் சின்ஹா,44,827 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 19,324 வாக்குகள்.

அதுவரை,​​பாங்கிபூர் தொகுதி வெறும் ஒரு சாதாரண இடைத்தேர்தல் களமாக மட்டுமே இருந்தது.ஆனால் நேற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றதும் பாங்கிபூர் தொகுதி இந்திய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தேர்தல் வியூகவகுப்பாளர் இறுதியாக தனது சொந்த மாநிலத்தில் தனது வெற்றிக்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.

பீகாரின் பங்கிபூர் தொகுதியோடு,ம,பியில் ஒருதொகுதி,குஜராத்தில் ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

மத்தியப் பிரதேசத்தின் தாடியா தொகுதி சமஉவாக காங்கிரசுக் கட்சியின் ராஜேந்திரபார்திக்கு மோசடி வழக்கில் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவரது சமஉ பதவி பறிக்கப்பட்டது.அதனால் அங்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரசு சார்பில் கன்ஷ்யாம் சிங்கும்,பா.ஜ.க சார்பில் அசுதோஷ் திவாரியும் போட்டியிட்டனர். இதில்,காங்கிரசு வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் வெற்றி பெற்றார்.

நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மூத்த பாஜக சமஉவும் முன்னாள் குஜராத் அமைச்சருமான யோகேஷ்படேல் ஜூன் மாதத்தில் காலமானதைத் தொடர்ந்து குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஞ்சல்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.பாஜக வேட்பாளர் சதீஷ்கோவிந்த்பாய் படேல் வெற்றி பெற்று அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.அவர் தனது காங்கிரசு போட்டியாளரும் முன்னாள் அமைச்சருமான பிகாபாய் ரபாரியை 30,630 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ம.பி,குஜராத் முடிவுகளைக் காட்டிலும் பீகார் முடிவு இந்திய ஒன்றிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Response