அதிமுக டிவிகேவை விழுங்கும் – எடப்பாடி அதிரடிப் பேச்சு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கன்னிவாடி பகுதியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது….

உங்கள் எல்லாருக்கும் இந்தத் தேர்தல் ஏன் வந்தது எனத் தெரியும்.இதே இடத்தில் 5 மாதங்களுக்கு முன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஒரு வேட்பாளர்.அவர் மாற்றுக்கட்சிக்கு விலைபோய் இன்று ஆளுங்கட்சியில் நிற்கிறார்.அவருக்கு தக்கபாடம் புகட்டவேண்டும்.

துரோகிக்கு தக்கபாடம் புகட்டுவீர்களா? அன்று வெற்றிக்காக 7 ஆயிரம் பேர் உழைத்தார்கள்.அப்படி உழைத்தவர்களையும் பொருட்படுத்தவில்லை.மக்கள் ஓட்டையும் பொருட்படுத்தவில்லை.அவர் இன்று விலைபோய் விட்டார்.அவரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா? சட்டப்பேரவைத் தலைவரிடம் அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.அவர் பரிசீலிப்பதாகத்தான் சொன்னார்.அதற்குள் கீழே வந்து இன்னொரு கட்சியில் இணைகிறார்.இது எவ்ளோ பெரிய ஜனநாயகப் படுகொலை.

தவெக தலைவர் சொல்கிறார்.அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறதாம்.வந்து பாரு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று.உன்னைப்போல் திரைப்படத்தை நம்பி கட்சி ஆரம்பிக்கவில்லை.தொடர்ந்து 52 ஆண்டு காலம் அதிமுகவில் பணியாற்றியிருக்கிறேன்.அதிமுகவில் நான் இணைகிறபோது இவர் பிறக்கவேயில்லை. அதுமட்டுமில்லை இன்னொரு தலைவர் சொல்கிறார்.அதிமுகவை படிப்படியாக டிவிகே விழுங்கும் என்கிறார். கனவில் கூட நடக்காதப்பா.அதிமுகதான் டிவிகேவை விழுங்கும்.

அதிமுக ஆரம்பித்ததில் இருந்து எவ்வளவு பிரச்னைகளை சந்தித்திருக்கிறோம்.ஏராளமான பிரச்னைகளை சந்தித்திருக்கிறோம்.சிறு குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என டிவிகே தேர்தலின்போது அறிவித்தார்கள். ஆனால் செய்யவில்லை.இலண்டனில் முதல்வர் தமிழ்நாட்டு தொழில் முதலாளிகளை சந்தித்துப் பேசினார்.இனி சுவிட்சர்லாந்து போகிறாராம்.எங்கே போனாலும் சரி மக்களுக்கு நல்லதிட்டம் கொடு.

இங்கே இருக்கிற விவசாயிக்கு காலுக்குச் செருப்பில்லை.உடுக்க உடையில்லை.இந்த நிலைமையில் உங்கள் வசதிக்காக கடன் வாங்கி சட்டமன்றம் கட்டவேண்டுமா? அதேபோல முதலமைச்சர் அறை இருக்கிறது.அதில் அண்ணா,எம்.ஜி.ஆர்.,அம்மா என அனைவரும் பணியாற்றினோம்.இவருக்கு மட்டும் பிடிக்கவில்லை.நாமக்கல் கவிஞர் மாளிகையில் 40 ஆயிரம் சதுரடி எடுத்துக்கொண்டு சொகுசாக சீரமைக்கிறார்.ஜன்னலை திறந்தால் கடல் காற்று படவேண்டும் என்றால் அதற்கு ஏழை மக்கள் பணம்தான் கிடைத்ததா? ஒவ்வொரு ரூபாயும் மக்கள் பணம்.

தவெக முதலமைச்சர் காஸ்ட்லி முதலமைச்சர்.அப்படியே கோட்டு சூட்டு போட்டு வருவார்.புகைப்படம் எடுத்து டிவியில் போட்டால் பணி முடிந்தது.சனி,ஞாயிறு விடுமுறை வேறு.இப்படிப்பட்ட முதலமைச்சரை இந்தியாவில் யாரும் பார்த்ததில்லை.அப்படியே அரசு அலுவலர் மாதிரி இருக்கிறார்.ஆனால்,முதல்வர் மாதிரி இல்லை.கரண்ட் எந்த நேரம் போகுது எனத் தெரியவில்லை.அமைச்சர் புஸ்ஸிஆனந்த் பேசும்போது கரண்ட் போகுது.இவர் நிகழ்ச்சியிலேயே கரண்ட் போகுது.அப்படி என்றால் எப்படி இவர்களால் சரிசெய்ய முடியும்.

நிர்மல்குமார் மின்வெட்டு என்று சொல்லவில்லை.மின்பற்றாக்குறை என்று சொல்கிறார்.மக்கள் அதிகமாக எல்லா மாநிலத்திலும் மின்சாரம் பயன்படுத்துகிறார்கள்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.பாட்டிக்குக்கூட பாதுகாப்பு இல்லை.விலைவாசி மிக உயர்ந்துவிட்டது.அரிசி,எண்ணெய் பருப்பு எல்லாம் விலை உயர்ந்துவிட்டது.இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை.காஸ்ட்லியாக வாழவேண்டும் என்று நினைக்கிற இந்த தவெக முதல்வருக்கு தகுந்த பாடம் கொடுக்கவேண்டும்.

கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் இறந்து விட்டார்கள்.அவர்களுக்குகூட அஞ்சலி செலுத்தாத தலைவர் டிவிகே தலைவர்.படுகாயமடைந்தவர்களைக்கூட அவர் பார்க்கவில்லை.அவரைத் தவிர மற்ற எல்லாருமே அஞ்சலி செலுத்தினார்கள்.இவர் வரவேயில்லை.அதுமட்டுமல்ல அந்த சம்பவம் நடந்த உடனேயே எந்த வண்டியில் ஏறினார் என்று கூடத் தெரியவில்லை.விமானத்தில் ஏறி சென்னை சென்றுவிட்டார்.

72 நாட்கள் வெளியில் வரவில்லை.இப்படிப்பட்ட தலைவரா மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார்.துக்கம் விசாரிக்கவேண்டும் என்றால் இறந்தவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிப்பார்கள்.ஆனால்,டிவிகே தலைவர் புதுமையானவர்.துக்கவீட்டுக்காரர்களை சென்னைக்கு வரவைத்து ஆறுதல் சொல்கிறவர்தான் இன்றைய முதலமைச்சர்

இவ்வாறு அவர் பேசினார்.

தாராபுரம் மூலனூரில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது….

மதுராந்தகத்தில் விஜய் பிரசாரம் செய்தார்.எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.எம்ஜிஆர் கையில் இரட்டை விரலை காட்டுகிறார்.அதற்காக கையை துணிவைத்துக் கட்டிவிட்டனர்.இது நியாயமா? விஜய் அவர்களே.இரட்டை விரலை மறைக்கலாம்.மக்கள் மனதில் இருந்து மறைக்கமுடியாது.ஏனெனில் 31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக.

அவர் அதிமுகவும், திமுகவும் ஒன்று என்கிறார்.திமுகவை எதிர்த்துத்தான் அதிமுகவே தோன்றியது.அவருக்கு எதுவும் தெரியவில்லை.மக்களைக் குழப்புகிறார்.அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இப்படிப்பட்ட நாடகத்தை நடத்துகிறார்கள்.

உங்களைப்போல வாய்பேசாத முதல்வரை யாரும் பார்த்ததில்லை.ஐந்தரை மணி நேரம் அப்படியே இருக்கிறார்.
உண்மையிலே அது ஆச்சர்யம்தான்.ஒருத்தரை ஒரு சேரில் ஐந்தரை மணி நேரம் அசையாமல் யாரும் பார்க்க முடியுமா? அதில் சாதனை படைத்திருக்கிறார்.எம்எல்ஏக்கள் எல்லோரும் பதவி ஏற்றனர்.அதுக்கு ஐந்தரை மணி நேரம் ஆச்சு,அவ்வளவு நேரமும் அப்படியே இருக்கார்.நாங்கள் கூட இரண்டுமுறை டீ குடித்துவிட்டு வந்துவிட்டோம் அவர் அசையவே இல்லை.இப்படிப்பட்ட முதல்வர்தான் விஜய்.சட்டமன்றத்தில் பதிலே சொல்வதில்லை.

வேட்பாளரை அறிமுகம் செய்யும்போது அந்த வேட்பாளர் நல்லவர் வல்லவர் என்கிறார்.ஓடிப்போனவர் நல்லவரா? ஒரு கட்சியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து போட்டியிட வைப்பதுதான் தூயகட்சியா? வேறொரு கட்சியில் வென்றவரை நிறுத்தி கொல்லைப்புற வழியாக தனது ஆட்சியை தக்கவைக்கச் செய்வதுதான் சரியா?

கம்யூனிஸ்ட் கட்சியே சொல்கிறது.இது திணிக்கப்பட்ட தேர்தல்,தேவையற்ற தேர்தல் என்று சொல்கிறார்கள். டிவிகே வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது.கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமுறை எச்சரித்து விட்டார்கள்.ஆதரவை வாபஸ் பெறவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துவிட்டார்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response