
நீட் வினாத்தாள் கசிவால் மறுதேர்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விரக்தி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகளால் நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இத்தகைய தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி,சமூக ஊடகம் மூலமாக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கரப்பான் பூச்சி கட்சி சார்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர்மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூன் 28 ஆம் தேதி தொடங்கினார்.
மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்க, ஜூலை 20 ஆம் தேதி (நேற்று) நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வதாகவும் கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது.இதற்கிடையே,கடந்த இரு தினங்களுக்கு முன்பு,சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வாங்சுக்கை அப்புறப்படுத்தினாலும்,நாடாளுமன்றம் நோக்கிய பேரணி திட்டமிட்டபடி நடந்தே தீரும் என கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்து,தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்தார்.
இந்நிலையில்,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.வான்சுக் மீதான டெல்லி காவல்துறையின் அடாவடி நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.அதேசமயம் நாடாளுமன்றத்திற்கு வெளியே காலை 11.30 மணியில் இருந்தே திட்டமிட்டபடி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல கரப்பான் பூச்சி கட்சியினர் திரண்டனர்.
அவர்களுடன் பல்வேறு மாணவர் அமைப்பினரைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்தனர்.பல்வேறு நகரங்களில் இருந்து வந்த இளைஞர்கள் முதுகில் பையுடன் நேரடியாகப் போராட்டக் களத்திற்கு விரைந்தனர்.சீருடை அணிந்த பள்ளி மாணவ,மாணவிகளும்,பெற்றோர்களும், முதியவர்களும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர்.சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் திரண்டனர்.பேரணிக்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்த காவல்துறையினர் டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். சிஐஎஸ்எப் உள்ளிட்ட துணை இராணுவப் படையினரும் நாடாளுமன்றத்தை சுற்றிய பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.அங்கு, கும்பல் கூட 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அனைத்தையும் மீறி மாணவர்கள்,இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க மிகுந்த தைரியத்துடன் தடைகளைத் தாண்டி அலைஅலையாக முன்னேறினர்.முக்கிய சாலைகள் முடக்கப்பட்டிருந்ததால் சிறு தெருக்கள்,குறுக்குவழிகள் மூலமாக குழுக் குழுவாகப் பிரிந்து ஒன்று கூடினர்.இதை எதிர்பார்க்காத காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.பல இடங்களில் பேரிகார்டுகளை மீறி இளைஞர்கள் முன்னேறி நாடாளுமன்றத்தையும் நெருங்கினர்.போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் வடக்குபுறம் இருக்கும் வாயில் பகுதியை நோக்கிச் சென்றனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைந்து விட்டால் என்ன ஆவது என்று பயந்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.ஆனால் அதன்பின்னரும் கலைந்து செல்லவில்லை என்பதால் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசினர்.இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காட்சி தந்தது.மேலும் இதனால் போராட்டக்காரர்களுக்கு கண் எரிச்சல்,சுவாசப் பிரச்னை ஆகியவை ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டினர்.இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.இளைஞர்கள் பலருக்கு மண்டை உடைந்தது.பெண்கள்,மாணவிகளும் விடாமல் அடித்து விரட்டப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் வடக்குபுறம் இருக்கும் வாயில் மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகைக்குச் செல்லும் வழி ஆகியவை பாதுகாப்பின் அடிப்படையில் இழுத்து மூடப்பட்டது.இளைஞர்கள் குவிவதைத் தடுக்க நாடாளுமன்றத்தின் அருகில் உள்ள மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.இணைய சேவை துண்டிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை ஒருவழியாக மீண்டும் ஜந்தர்மந்தர் பகுதிக்கு திருப்பி அனுப்பினர். இதற்கிடையே இரவிலும் மீண்டும் போராட்டம் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர்களின் இப்பேரணி இதுவரையிலும் டெல்லியில் நடந்த போராட்டங்களை விட மிகத்தீவிரமானதாக இருந்தது.விவசாயிகள் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை விட தீவிரமாக டெல்லியின் அனைத்துப் பகுதிகளில் இருந்து இளைஞர்கள் திரண்டு வந்தனர்.இளைஞர்களின் இந்தப்போராட்டம் ஒன்றிய அரசுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தப்போராட்டத்தால் டெல்லி முழுவதும் பதற்றம் நிலவியது.
போராட்டத்தைக் கண்டு பயந்த ஒன்றிய அரசு,போராட்டகாரர்கள் தரப்பைச் சார்ந்த நிர்வாகிகளான சவரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரைச் சந்தித்தது.ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அவர்களைச் சந்தித்தார்.அப்போது அவர்கள் மூன்று முக்கிய கோரிக்கை கொண்ட கடிதத்தை அவரிடம் வழங்கினார்கள்.அதில்,ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் அல்லது அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும்.சமூகஆர்வலர் சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் பேரணியைத் தடுக்கும் விதமாக, நாடாளுமன்றம், சென்ட்ரல் செக்கெரட்டேட், பட்டேல் சவுக், ராஜூவ் சவுக், ஜன்பத் ஆகிய பகுதிகள் முழுவதும் டெல்லி காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.ஒவ்வொரு இடங்களிலும் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.அந்தப்பகுதிகளில் போக்குவரத்தும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் காலை நேரத்தில் அலுவலகப்பணிக்குச் செல்லும் ஆயிரக்காணோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணிக்கு சாரை சாரையாக மக்கள் திரண்டனர்.இருப்பினும் அதிகப்படியான கூட்டத்தை கூட்டவேண்டும் என்பதற்காக,பங்கேற்றவர்கள் அனைவரும் செல்போன் மூலம் பலரையும் பேரணியில் கலந்துகொள்ள அழைத்து வந்தனர்.இதனால் ஜந்தர்மந்தரில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.அதனைத் தடுக்கும் விதமாக இன்டர்நெட் சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது. மேலும் செல்போன்கள் செயல்படாதவாறு ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் மத்திய டெல்லி முழுவதும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.
இரவிலும் போராட்டம் தொடருவதும் ஒன்றியம் முழுவதும் இந்தப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்கள் திரள்வதும் ஒன்றிய அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


