எத்தனால் பெட்ரோல் சிக்கல் – பிரதமர் வீடு நோக்கி பேரணி

பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த சிக்கல் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது.இதுகுறித்து, ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 135 அமெரிக்க டாலராக உயர்ந்தபோது, ​​எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்காமல் இருந்திருந்தால், டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 வரை உயர்ந்திருக்கக்கூடும்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, இ20 பெட்ரோல் பயன்பாடு சில்லறை எரிபொருள் விலையில் கடுமையான உயர்வைத் தடுத்தது மட்டுமல்லாமல், நெருக்கடியின் உச்சத்தில் நுகர்வோருக்கு லிட்டருக்கு சுமார் ரூ.30 சேமிப்பையும் அளித்தது. எத்தனால் கலப்பின் நோக்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலையைக் குறைப்பதே ஆகும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேசமயம்,டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசுகையில், பெட்ரோல் பங்குகளில் இ20 மற்றும் சாதாரண பெட்ரோல் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நுகர்வோருக்கு வழங்கவேண்டும்.இ20 கலந்த பெட்ரோலுக்கு குறைவான விலையை நிர்ணயிக்க வேண்டும்.இ20 பெட்ரோல் வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் ஒன்றிய அரசு கூறுகிறது.அந்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 4 ஆம் தேதி சுமார் 100 பேருடன் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்தவுள்ளோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று இ20 பெட்ரோல் குறித்த தங்கள் அனுபவங்களையும் கவலைகளையும் பகிர்ந்துகொண்டனர்.இ20 பெட்ரோலால் தங்கள் வாகனங்களில் ஏற்பட்ட சிக்கல்களையும் தெரிவித்தனர்.

Leave a Response