2024 – 25 ஆம் நிதியாண்டுக்கான இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை பாஜக பெறவில்லை. பீகாரின் ஐக்கிய ஜனதாதளம், ஆந்திராவின் தெலுங்குதேசம் ஆகிய கட்சிகளில் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை என்பதால் அவ்விரு மாநிலங்களுக்கு மட்டும் கூடுதலாக நிதி ஒதுக்கியிருந்தார்கள்.
இதில் பீகாருக்கு மட்டும், சாலைத் திட்டங்கள் மற்றும் வெள்ள அபாயத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.விமான நிலையம், மருத்துவக் கல்லூரி உட்பட பல வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இது இந்திய ஒன்றியம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தது.
எல்லோரும் பீகாருக்கு அதிக நிதி கொடுத்துவிட்டார்கள் என்று குமுறிக் கொண்டிருக்க பீகாரின் ஐக்கியஜனதா தளம் கட்சியினரோ…
மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை கூட்டி, பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இது பற்றிய எந்த அறிவிப்பும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பற்றி அறிவிப்பு வெளியிடப்படாதது, ஐக்கிய ஜனதா கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இது குறித்து பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கு எல்லாம் தெரியவரும் என்று மழுப்பலாகப் பதில் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
இதுவும் அக்கட்சியினரிடமும் பீகார் மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.