தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த மோடி அரசு – முதலமைச்சர் கோபம்

2024 -25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த நிதிநிலை அறிக்கை குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது….

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று 2 நாட்கள் முன்னதாக, நான் எனது சமூகவலை தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன்.

3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டுக்கு அறிவித்துள்ள ரயில்வே திட்டங்கள், தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மேம்பால விரைவுச் சாலை திட்ட ஒப்புதல் என சில கோரிக்கைகளை அதில் தெரிவித்திருந்தேன்.

ஆனால், எதையுமே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒருசில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில், ஒருசில மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

அறிவித்துள்ளார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா? என்பது என்னைப் பொறுத்தவரை சந்தேகம்தான். எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் இன்று வரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

தமிழ்நாடு 2 மிகப்பெரிய பேரிடர்களைச் சந்தித்தது. ரூ.37 ஆயிரம் கோடி வரை இழப்பீடு கேட்டிருந்தோம். தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டு வருகிறோம்.

ஆனால், இதுவரை ரூ.276 கோடிதான் கொடுத்துள்ளார்கள். அதுவும் சட்டப்படி வரவேண்டிய தொகைதான். இதில் வேடிக்கை என்னவென்றால், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக வைத்துள்ள மதிப்பா?

தமிழ்நாட்டுக்கான எந்தச் சிறப்புத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. நம் கோரிக்கை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவிக்கவில்லை.

தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட்டில் இல்லை என்பதைவிட, ஒன்றிய பாஜக ஆட்சியின் சிந்தனை, செயல் அளவிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும்தான் இந்த அறிக்கையில் உள்ளது.

ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது அந்த நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேணடும். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் நீதி இல்லை; அநீதிதான் அதிகம் உள்ளது.

அரசியலை தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம், அனைவரும் இணைந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் நேற்றுதான் கூறினார்.

ஆனால், அதற்கு மாறாக, இன்று அவரது அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகள் செய்வதுதான் சிறந்த அரசு. அப்படித்தான் தமிழ்நாடு அரசின் செயல்பாடு உள்ளது. இதைப் பார்த்தாவது ஒன்றிய அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம். டெல்லியில் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 ஆம்தேதி (இன்று) போராட்டம் நடத்த உள்ளனர்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் அளித்த பதில்கள்…..

நாற்பதுக்கு நாற்பது வெற்றிதான் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் என்று நினைக்கிறீர்களா?

தமிழ்நாட்டு மக்கள் மீது அவர்கள் அவ்வளவு ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறேன், தமிழ்நாடு மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் கூறினாரே?

அவர் தமிழ்நாடு மட்டுமா பிடிக்கும் என்றார். திருக்குறளும் பிடிக்கும் என்றார். ஆனால், திருக்குறள் என்ற வார்த்தையோ, தமிழ்நாடு என்ற வார்த்தையோ பட்ஜெட்டில் இல்லை.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத நிலையில், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு எவ்வாறு கையாளும்?

இதுவரை எப்படி கையாண்டோமோ அவ்வாறு கையாள்வோம். தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர். அதனால்தான், நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கப் போகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Response