
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 நவம்பர் மாதம் நடைபெற்றது.அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார்(75) தொடர்ந்து 10 ஆவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்கா ஆகியோர் துணை முதலமைச்சராகினர்.
முதலமைச்சராகப் பதவியேற்று 3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், நிதிஷ்குமார், முதலமைச்ச்ர் பதவியிலிருந்து விலகி,மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகிறார் என்றும் அவரது மகன் நிஷாந்த்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு பாஜக முடிவு செய்துள்ளது என்றும் நேற்று தகவல்கள் வெளியானது. இது அந்த மாநில அரசியலில் மட்டுமின்றி ஒன்றியம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதில்….
எனது நாடாளுமன்றப் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை என் இதயத்தில் இருந்து வருகிறது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்தமுறை நடைபெறும் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்.உங்களுடனான எனது உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும்,வளர்ந்த பீகாரை உருவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு உறுதியாக இருக்கும் என்றும் முழு நேர்மையுடன் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.அமைக்கப்படும் புதிய அரசாங்கத்திற்கு எனது முழுஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
இது நிதிஷ்குமாரின் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. கொடுப்பது போல் கொடுத்து பறித்துக் கொண்டது பாஜக என அக்கட்சியினர் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.
இது நிதிஷ்குமார் மனமுவந்து எடுத்த முடிவல்ல அவரைக் கட்டாயப்படுத்தி இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறார்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


