
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். அவரது மகன் சபரிவர்மன் (34).மாற்றுத்திறனாளி.இவர் ஈத்தங்காட்டில் மளிகைகடை நடத்தி வந்தார்.கடையில் குட்கா புகையிலை விற்றதாக தென்தாமரைகுளம் காவல்துறையினர் சமரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
அங்கு,சிறைக் காவலர்கள் அவரை கட்டிவைத்து சித்ரவதை செய்து கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடற்கூறாய்வு அறிக்கையில்,கை முறிவு,உடல் முழுவதும் 19 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதியானது.
இதுதொடர்பாக நேசமணிநகர் காவல்துறையினர்,நாகர்கோவில் மாவட்ட சிறைக் காவலர் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ்,சிறைக்காவலர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 3 பேர் மீது கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒரு கைதிக்கும்,சபரிவர்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும்,அப்போது அங்கு வந்த வார்டன் சபரிவர்மனை தாக்கினார் என்றும்,அவர்களின் தகராறை விலக்கிவிட்டு வார்டன் சென்ற பின்னர் 8 கைதிகள் சேர்ந்து சபரிவர்மனின் கை,கால்களைக் கட்டிவைத்து தாக்கியதாக கூறி திடீரென்று ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
சிறையில் உள்ள சககைதிகள் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (21),சாரதி (19),குலசேகரத்தைச் சேர்ந்த ஜெகன்(40),சரத்,நெல்லையைச் சேர்ந்த பெருமாள்,கன்னியாகுமரியைச் சேர்ந்த சேதுராம்(30),அஜித் (29), கொட்டாரத்தை சேர்ந்த அரவிந்த் (27) ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நேசமணிநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு கைது செய்து உள்ளனர்.கைது செய்யப்பட்ட 3 காவலர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைதான 8 கைதிகளில் ஜெகன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன.அஜித் மீது கொலை வழக்கு உள்ளது. இவர்கள் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர்.பெருமாள் நெல்லையைச் சேர்ந்தவர்.இவர்மீது கொலை வழக்கு உள்ளது.இதனைத் தவிர 3 பேர் மீது போக்சோ வழக்கும்,2 பேர் மீது அடிதடி வழக்கும் உள்ளது.
இதற்கிடையே சபரிவர்மனின் மரணத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக அவரது சகோதரி கவுதமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக கவுதமி கூறியதாவது….
எனது சகோதரரின் உடற்கூராய்வு அறிக்கையில்,அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்,அந்தல் காயங்களால் மரணம் ஏற்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
19 இடங்களில் கொடூரமான காயங்கள் இருந்தும்,அது மரணத்திற்குக் காரணமில்லை என்றால்,எனது சகோதரர் எப்படி இறந்தார்? அவரை கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றார்களா? அல்லது மூச்சுத்திணறச் செய்து கொன்றார்களா? என்ற உண்மை எங்களுக்குத் தெரியவேண்டும்.அவர் எப்போது இறந்தார்? என்ற சரியான நேரமோ அல்லது தேதியோ அந்த அறிக்கையில் இல்லை.வெள்ளிக்கிழமையா,சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா என்பதில் பெரும் மர்மம் நீடிக்கிறது.எனது சகோதரர் சாகக்கூடியவர் அல்ல;அவருக்கு எந்தவிதமான உடல்நலக் குறைபாடும் கிடையாது.அவரது கை ஊனமே தவிர,அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.
தற்போது 3 சிறை வார்டன்கள் மற்றும் 8 கைதிகளைக் கைது செய்திருப்பது என்பது அதிகாரிகளையும், உண்மையான குற்றவாளிகளையும் காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு கண்துடைப்பு நாடகமே தவிர வேறில்லை.இதில் மிகப்பெரிய அளவில் போலித்தனம் நடக்கிறது.யாரையோ காப்பாற்ற இவர்கள் முயற்சி செய்கிறார்கள்.எனவே,இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.மாவட்ட கலெக்டர் இதில் நேரடியாகத் தலையிட்டு,மீண்டும் முறையாக உடற்கூராய்வு செய்ய உத்தரவிடவேண்டும்.எனது சகோதரரின் மரணத்திற்கு முறையான நீதி கிடைக்கும்வரை,அவரது உடலை வாங்கமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபரிவர்மனின் உடலை 3 ஆவது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.இதனால் பிரேத பரிசோதனைஅறையின் முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும்,உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.நீதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை,அவரது மனைவி ஆனந்தவல்லி மற்றும் குடும்பத்தினர்,பொதுமக்கள் கன்னியாகுமரி- நாகர்கோவில் 4வழிச் சாலையில் வரிசையாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


