
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.
கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனிதப் புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின் படி 1995-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும், பத்திற்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு காரணமாக அவர் அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், வழக்கம்போல இலங்கை இனவெறி அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுகளின்போது நடந்த அகழாய்வில் மனிதப் புதைகுழிகளிலிருந்து 240 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், 14 குவியல் எலும்புகள், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவு பாட்டில்கள், பொம்மைகள், குழந்தைகளுக்கான பைகள், காலணிகள் போன்ற பொருள்களும் தோண்டி எடுக்கப்பட்டன.
இதையடுத்து அந்த உடல்களைத் தோண்டி எடுத்து, டிஎன்ஏ பரிசோதனை மூலம் மீட்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நிதிபற்றாக்குறையால் இந்தப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அகழாய்வு செய்யும் பணிகளை மீண்டும் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதோடு, இந்த அகழாய்வுப் பணிகளின்போது, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தூதரக பிரதிநிதிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மனிதப்புதைகுழியைப் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்களுக்கு யாழ்ப்பாண நீதிபதி செல்வநாயகம் லெனின்குமாரின் அனுமதி கிடைத்துள்ளதாக, செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் மனித உரிமைகள் வழக்குரைஞர் ரணிதா ஞானராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
முப்பதாண்டுகள் கடந்தும் சிங்களர் செய்த கொடுமைகள் அவர்களைத் துரத்திக் கொண்டேயிருக்கின்றன என்றும் இம்முறை, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதைப் பார்வையிட அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால் சிங்கள அரசுக்குச் சிக்கல் என்று சொல்லப்படுகிறது.


