தேனிசை செல்லப்பா மறைந்தார் – தமிழ்மக்கள் கண்ணீர் வணக்கம்

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா இன்று அதிகாலை மறைவுற்றார்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லப்பா. பதினோராவது வயதில் தன் தந்தையை இழந்தவர்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மேல் பற்றுக்கொண்ட செல்லப்பா,அவரைத் தேடிப்போய்ச் சந்தித்தார்.அவரைப் பாடச்சொல்லிக் கேட்ட ராதா,பாடியது பிடித்ததால், செல்லப்பாவைத் தன் குழுவில் சேர்த்துக்கொண்டார்.

அப்போதிருந்து எம்.ஆர்.ராதா நாடகங்களில் பாடிக்கொண்டும், சிறுசிறுவேட்த்தில் நடித்துக்கொண்டும், ராதாவின் குழுவிலேயே இருந்தார் செல்லப்பா..

அப்போதைய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சி.பா.ஆதித்தனாரோடு சேர்ந்து மன்னார்குடியில் பட எரிப்புப் போராட்டத்திற்கு பெரியார் ஏற்பாடு செய்திருந்தார். இந்திய தேசப்பட்த்தை எரிப்பதுதான் போராட்டம், போராட்ட மேடையில் எம்.ஆர்.ராதாவின் நாடகமும் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்ட மேடையில் பாட்டுக்கச்சேரி ஒன்றை நடத்த ஆதித்தனார் விரும்பினார்.அதற்குப் பாடகர்கள் யாரும் வராதநிலையில் செல்லப்பா மேடையேற்றப்பட்டார். அவரது பாடல், பிடித்துப்போன ஆதித்தனார் செல்லப்பாவை நாம்தமிழர் கட்சியின் முழுநேரப்பாடகராக நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார், அங்கிருந்தபடியே நாம் தமிழர் கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார் செல்லப்பா.

தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் பாடல்களைக் கேட்ட, விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் பேபி சுப்பிரமணியம், செல்லப்பாவைச் சந்திக்கிறார்.

அவர்,தேசியத்தலைவர் பிரபாகரனுடன் செல்லப்பாவைச் சந்திக்க வைக்கிறார்.அப்போது,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பரப்புரைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் எழுதப்பட்ட பத்து பாடல்களைக் கொடுத்து இதை நீங்கள் பாடித்தரவேண்டும் என்று பிரபாகரன் ஒப்படைத்தார்.அந்தப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதன்பின், 1990 ஆம் ஆண்டு செல்லப்பா ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். யாழ்கோட்டை மைதானத்தில் ஐந்து இலட்சம் மக்கள் முன்னிலையில் அவரது பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து எட்டு மாவட்டங்களில் அவரது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

அதன்பிறகு உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் தேனிசை செல்லப்பாவின் குரல் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பெருந்தொகை கொட்டிக்கொடுத்தபோதும் கொள்கைக்கு முரணான மேடையேற மறுத்துவிட்டவர் செல்லப்பா. கடைசிவரைக்கும் இனத்தின், மொழியின் உணர்வெழுச்சிப்பாடல்களே போதும் என்று வாழ்ந்து மறைந்திருக்கிறார் தேனிசை செல்லப்பா.

அவருடைய வாரிசுகள், சாந்தி, இளங்கோ ஆகியோர் அவருடைய கொள்கை வாரிசுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் இன்று மறைந்திருக்கிறார்.அவருக்கு உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் கண்ணீர் வணக்கம் செலுத்திவருகின்றனர்.

அவர் மறைந்திருக்கலாம் ஆனால் அவர் குரலில்,

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும்

பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்
பகைவன் ஓடும் சேதி கிடைக்கும்
போரில் வெற்றி முரசு முழங்கும்
புலிகள் கழுத்தில் மாலை குலுங்கும்

கூண்டுபறவை சிறகு விரி்க்கும்
குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்
மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்

வானம் நமது கொடியை அழைக்கும்
மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும்
மானம் நமக்கோர் மகுடம் வழங்கும்
மண்ணில் நமது பெயரும் விளங்கும்

பாடல் ஒலித்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டேயிருக்கிறது.

மறைந்தும் உணர்வூட்டும் பாசறைப் பாணருக்கு வீரவணக்கம்!

– அ.தமிழ்ச்செல்வன்

Leave a Response