ஈழத்தமிழ்மக்கள் பிரதிநிதிக்குழு முதல்வர் விஜய் உடன் சந்திப்பு

தமிழீழத்தைச் சேர்ந்த,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,ஜூலை 3 அன்று நடந்த தமிழ்நாடு முதலைச்சருடனான சந்திப்பு தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு….

இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த்தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் இன்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம்.எழுத்துமூலமாக கோரிக்கை கடிதமும் கையளித்துள்ளோம்.

இச்சந்திப்பில்,ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல்,மனித உரிமைகள் பிரச்சினைகள்,ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம்,ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம்,இந்திய–ஈழத்தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத்தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில்,ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில்,தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழுபேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது.

அக்குழுவில் இடம்பெற்றவர்கள்…

1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தலைவர், தமிழ்த் தேசியப் பேரவை; நாடாளுமன்ற உறுப்பினர்.
2. செல்வராசா கஜேந்திரன் – பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
3. பொன்னுத்துரை ஐங்கரநேசன் – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
4. கே.வி.தவராசா – தலைவர், ஜனநாயகத் தமிழர் கட்சி; ஜனாதிபதி சட்டத்தரணி
5. தருமலிங்கம் சுரேஷ் – தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
6. கனகரட்ணம் சுகாஷ் – உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும்,
7. நடராஜர் காண்டீபன் – கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும்

நன்றி.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்- தமிழ்த் தேசியப் பேரவை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் எடுத்துரைத்தவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட முதல்வர்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்கிறார்கள்.

Leave a Response