
நீட் தேர்வுச் சிக்கல் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.
காங்கிரசு உறுப்பினர் தாரகை கத்பர்ட் பேசும்போது,நீட் போன்ற தேர்வுகள் வருவதற்கு காங்கிரசுக் கட்சி காரணமாக இருந்ததாக நேற்று அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள்.காங்கிரசு கொண்டுவந்த எத்தனையோ திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடிய பாஜக அரசால்,ஏன் நீட் தேர்வை நிறுத்தமுடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக உறுப்பினர் போஜராஜன் கூறியதாவது…
காங்கிரசு ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வந்ததாக,காங்கிரசு உறுப்பினரே தெரிவித்ததற்கு நன்றி. பாஜக அரசு நீட் தேர்வை தடுத்து நிறுத்தி இருக்கலாமே என்கிறார்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் நீட் தேர்வு நடக்கிறது.அதனால்,நீட் தேர்வை நிறுத்த முடியவில்லை.நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் யார் வாதாடினார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய தாரகை கத்பட், நீட் தேர்வு எந்தெந்த மாநிலத்துக்குத் தேவையோ,அந்தந்த மாநிலத்துக்கு கொண்டுவரலாம் என்றுதான் நாங்கள் அப்போது சொன்னோம்.காங்கிரசு கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களும் திருத்தம் செய்யப்பட்டுவருகின்றன.மாணவர்களுக்கான நீட் தேர்வு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரலாமே? என்று கேட்டார்.
அப்போது எழுந்து பேசிய அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம்,நீட் தேர்வை காங்கிரசு கொண்டு வந்தது என்றும், பாஜக ஏன் நீட் தேர்வை நடத்துகிறது என்றும் பேரவையில் அந்தந்தக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் பேசினர்.
காங்கிரசு, பாஜக இரண்டும் வெவ்வேறு கட்சிகள் என்றாலும்,அவர்கள் உடலில் இருப்பது ஒரே ஜீன்தான்.யார் ஆட்சிக்கு வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்தான் நீட்தேர்வைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.ஆனால்,உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீக்குவதற்கு சட்டம் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது.இதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.
பிரதமராக இராஜீவ்காந்தி இருந்தபோது,விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்ற மதக்கோட்பாடு முன்பு இருந்தது.ஆனால்,1984 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அதை மாற்றியமைத்து ஜீவனாம்சம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டது.அப்போதைய பிரதமர் இராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று மாற்றினார்.
அதேபோல் தற்போது,மாநில அரசுகளுக்கு கனிமவளங்கள் மீதான ராயல்டியை வசூலிக்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஆனால்,தீர்ப்பு வந்த 6 மாதங்களுக்குள்ளாகவே,சமீபத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய பாஜக அரசு செல்லாததாக்கியுள்ளது.
எனவே,காங்கிரசு மற்றும் பாஜக ஆளும்போது மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து,நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வந்து மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.
ஆனால்,இவர்கள் அரசியல் செய்வதற்காகத்தான் நீட் தேர்வு உதவுகிறது.அப்பாவி மாணவர்கள்தான் உயிரிழக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சி.வி.சண்முகம் தில்லி அரசியலின் உண்மையை உடைத்துப் பேசிவிட்டார் என்று அரசியல் நோக்கர்களும் பொதுமக்களும் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.


