தமிழக அரசுப்பணி நியமன உரிமை வடஇந்திய நிறுவனத்துக்கா? – விஜய்க்கு எதிர்ப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர்களை நியமிக்க உத்திரப்பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கி பிற்பக்கப்பட்டுள்ள பணி ஆணை கண்டனத்திற்கு உரியது. உடனே அந்த ஆணையை இரத்து செய்ய வேண்டும் என மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 30,000 காலி இடங்களை நிரப்பவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மக்களின் அன்றாட பயணத்தேவைகளை நிறைவேற்றும் அடிப்படையான சேவை நிறுவனமாகும்.தமிழ்நாட்டில் தினமும் சுமார் 2 கோடிப்பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

50 ஆண்டுகளாக தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து முறையான பயிற்சி வழங்கி சிறப்பான சேவையை போக்குவரத்துக் கழகங்கள் செய்து வந்தன.கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தனர்.இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்தது. ஒப்பந்தப் பணியாளர் முறை இடஒதுக்கீட்டை மறுப்பது,சமூகநீதிக்கு எதிரானது,பாதுகாப்பான பயணத்திற்கு பயன்படாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என கூறி திமுக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்று தனிநீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்.வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

திமுக அரசு காலிப்பணியிடங்களைப் நிரப்பாமல்,ஒப்பந்தப் பணியாளர்களை ‘சால்வாட்’ என்ற நிறுவனம் மூலம் நியமனம் செய்தது.தவெக அரசு தற்போது “எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்” என்ற உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் மூலம் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.

இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு ஒப்பந்தம் முறையில் நியமனம் செய்ய ஆணை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இப்படிச் செய்வதால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும்,இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் கைவிடப்பட்டு சமூகநீதியும் பாதிக்கப்படும்.எனவே,மாநகரப் போக்குவரத்து கழகத்தில் வெளிமுகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க உத்திரப்பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஆணையை இரத்து செய்யவேண்டும்.

மேலும் சிந்தூரி மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ் என்கிற நிறுவனத்திற்கு நிர்வாகப் பணியாளர்கள் 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஆணை வழங்கியிருப்பதையும் இரத்து செய்யவேண்டும்.காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தரமான முறையில் பூர்த்தி செய்யவேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response