
இந்திய ஒன்றியம் முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவு பெற்றுள்ளது.இதில் சுமார் 13 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியா கூட்டணியில் உள்ள 20 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,தொண்டர்கள் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகப்
புறப்பட்டனர்.
இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரசு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரசு
பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த சுமார் 300 எதிர்க்கட்சி பாமஉக்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது….
காங்கிரசுக் கட்சிக்கு 3 சமரசம் செய்ய முடியாத கோரிக்கைகள் உள்ளன.அவை,தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இரத்து செய்தல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துதல் ஆகியவையாகும்.
நாடு முழுவதும் காங்கிரசும்,இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் இந்த 3 கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்காகப் போராடி வரும் சிவில் சமூக அமைப்பினர் மற்றும் இளைஞர் அமைப்புகளுடன் காங்கிரசு துணை நிற்கும்.
இவ்வாறு கார்கே கூறினார்.


