
வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் எனும் எஸ்ஐஆர் தொடர்பாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளோட்டோர் நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது….
எஸ்ஐஆர் மூலம் எந்தக்கட்சி வெற்றி பெற்றது,தோற்றது என்பது எனக்கு முக்கியம் கிடையாது.இந்த நாட்டின் குடிமகனின் உரிமை வாக்களிப்பது.அதன்மீது எவ்வளவு பெரிய தாக்குதல் நடந்துள்ளது என்பதைப் பற்றிப் பேசுகிறேன்.இந்தியாவில் இதுவரையில் மக்கள் எந்த விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்ததில்லை.தேர்தல் ஆணையம் பாகமுகவர்கள் மூலம்தான் செய்வார்கள்.
365 நாட்களுக்கும் வேலை பார்ப்பது தேர்தல் ஆணையம்.வருடத்திற்கு 4 முறை மறுஆய்வு செய்து ஜனவரி மாதம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள்.பிப்ரவரி மாதம் இணையதளத்தில் பட்டியலை வெளியிடுவார்கள்.2025 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் எஸ்ஐஆர் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருந்தது என்பது முதல் கேள்வி.தமிழ்நாட்டில் 6 கோடி மக்கள் உள்ள நிலையில் ஏன் ஒரு மாதத்தில் எஸ்ஐஆர் செய்தீர்கள்.
வெளிநாட்டில் இருந்து நுழைந்தவர்கள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் கேட்ட பிறகும் 15 வாரமாக தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை.தேர்தலுக்கு 3 மாதம் உள்ளபோது ஏன் வருகிறீர்கள்.உங்களின் நோக்கம் என்ன? ஸ்வச் பாரத் விளம்பரத்திற்குப் போட்டோ போட்ட நமது மன்னர், மனதின் குரல் நிகழ்ச்சியில் எஸ்ஐஆர் பற்றி ஏன் பேசவில்லை? எஸ்ஐஆர் என்பது எல்லோரையும் உள்வாங்கும் வேலையா அல்லது நீக்கும் வேலையா?.
மன்னர் ஆட்சி வந்த பிறகு தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்து 2023 ஆம் ஆண்டு தலைமை நீதிபதி நீக்கப்பட்டார்.பிறகு ஆளுங்கட்சியில் இருந்து இருவரும்,எதிர்க்கட்சியில் இருந்து ஒருவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.மேலும்,தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வு பெற்ற பிறகும் அவர்மீது வழக்கு தொடுக்கமுடியாது எனச் சட்டப்பாதுகாப்பு வழங்கித் திருத்தம் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.
மேற்குவங்கத்தில் 16 இலட்சம் பேரை நீக்கியது யார்? என இப்போதுவரை தெரியவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு 38 இலட்சம் பேர் எங்களின் வாக்கு இல்லை என நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், தீர்ப்பாயத்தை அமைத்தது நீதிமன்றம்.இப்போது,அந்தத் தீர்ப்பாயம் 38 இலட்சம் பேரின் வழக்கை முடிக்க 15 ஆண்டுகள் ஆகும் எனக் கூறுகிறது.இவ்வளவு ஆண்டுகள் வாக்களர்கள் தனது உரிமைக்காகக் காத்திருக்க வேண்டும்.38 இலட்சத்தில் 82,000 பேர் தவறாக நீக்கப்பட்டதாகத் தீர்ப்பு வருகிறது.
கர்நாடகாவிலும் அவசரமாக எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து நாங்கள் 100 பூத்களின் தரவுகளை ஆய்வு செய்தோம்.அதில் பல்வேறு நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான கண்ணீர் கதைகளைக் கேட்கமுடிந்தது.சிலபகுதிகளில் திட்டமிட்டு பாஜகவினர் இஸ்லாமியர்களை நீக்கியுள்ளார்கள்.நீக்கப்பட்ட 13 கோடி வாக்களார்கள் பெரும்பாலும் ஏழைகள்,பழங்குடிகள்,சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தேர்தல் சார்ந்த பிரச்னை இல்லை.இது நமது தன்மானம்,உரிமை சார்ந்த பிரச்னை.இது ஜனநாயகத்தைக் கொல்லும் முயற்சி.இடஒதுக்கீடு,நீட்,தொகுதி மறுவரையறை தொடர்பான போராட்டத்தில் மொத்த இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு ஏன் அமைதியாக உள்ளது? ஒரு அரசியல் குழப்பம் வந்துள்ளது.
ஆனால் மக்கள் போராட வேண்டும்.தலைமைத் தேர்தல் ஆணையரை தூக்கிவிட்டு,அவரை விசாரிக்க வேண்டும். எஸ்ஐஆரை இரத்து செய்யவேண்டும்.ஞானேஷ்குமாரும் அவரை வேலை பார்க்க வைத்த மோடியும் அமித்ஷாவும் திருடர்கள்.மக்கள் உங்களை மன்னிக்கமாட்டார்கள்.2023 முதல் தேர்தல் ஆணையம் எடுத்த எல்லா முடிவுகளையும் தேர்தல்களையும் இரத்து செய்ய வேண்டும்.
கேள்வி கேட்பது மக்களின் உரிமை,பதில் சொல்வது அரசின் கடமை.கேள்வி கேட்கக்கூடாது,போராட்டம் நடத்தக்கூடாது என்பது சர்வாதிகாரம்.நமது நாட்டின் மன்னர் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார்.தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தாலும் தேர்ந்தெடுத்த பிறகு,கேள்வி கேட்பது செய்தியாளர்களின் வேலை;அதற்குப் பதில் அளிப்பது உங்களின் கடமை.ஜனநாயகத்தின் நான்காவது தூணை அவமானப்படுத்துகிறார்கள்.
ஏன் தமிழ்நாட்டில் போராட்டத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை,ஊடகங்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள் என முதல்வரைச் சந்தித்தால் கேட்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


