விடுதலைச்சிறுத்தைகளின் விருதைப் பெறுவது ஏன்? – பிரகாஷ்ராஜ் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா – 2024 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் துரை.இரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினார். முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ்,பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமாவளவன் விருதாளர்களின் தகுதியுரையை வாசித்தார்.

இதையடுத்து, நடப்பாண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது – நடிகர் பிரகாஷ்ராஜ், ‘மார்க்ஸ் மாமணி விருது – இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு ‘காமராசர் கதிர்’, திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள் மொழிக்கு ‘பெரியார் ஒளி, சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தருக்கு ‘காயிதேமில்லத் பிறை’, கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு ‘செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கினார். விருதாளர் ராஜ்கவுதமன் உடல்நிலை காரணமாக வர இயலாததால் அவரது உறவினர் ஜெகநாதன் விருதை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அம்பேத்கர் சுடர் விருது பெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது….

எந்தக் கட்சி மேடையிலும் என்னைப் பார்க்க முடியாது. ஏனென்றால் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்தக் கட்சி மேடையிலும் நிற்க எனக்குப் பிடிக்காது. ஆனால் நான் போராடுகின்ற அதே கொள்கைக்காகப் போராடும் விசிக கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் எனது தோழர்கள். அதற்காகவே இன்றைக்கு உங்கள் முன்பு நிற்கிறேன்.

இங்கே விருதுகள் வாங்கிய பலரைப் போல அரசியலில் எனக்கு நீண்ட காலப் பயணம் கிடையாது. ஆனால் உடம்புக்கு ஒரு காயமானால், சும்மா இருந்தால் அந்த வலி போய்விடும். ஆனால் சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ காயம் ஏற்பட்டால், அதற்கு நாம் பேசாமல் இருந்தால் வலி அதிகம் ஆகிவிடும். நான் ஒரு கலைஞன். மக்களின் அன்பு, நம்பிக்கையைப் பெற்றதால்தான் இன்றைக்கு மேடையில் நிற்கிறேன். மேடை ஏற்றிய மக்களுக்கும், சமுதாயத்துக்கும் ஒரு பிரச்சினை வரும்போது ஒரு கலைஞன் கோழையாகி விட்டால் சமுதாயமும் கோழையாகிவிடும். அந்த வகையில் நான் செய்து கொண்டிருப்பது என் கடமையைத் தான்.

கடந்த 10 ஆண்டுகளாக தான் இந்த மன்னரை (பிரதமர் மோடி) எதிர்த்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் அவரை மன்னர் என்றும் கூற முடியாது. அவர்தான் தெய்வக் குழந்தை ஆகிவிட்டாரே. நாட்டுக்கு அவரால் எதாவது துன்பம் ஏற்பட்டால் அவரைத் திட்டவும் முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது.

மக்களின் பரிசத்தை உணராத ஒருவர், மனதை அறியாத ஒருவருக்கு மக்களின் பசி புரியாது. எனவே தன்னை தெய்வமகனாகச் சொல்லிக் கொள்பவர் தெய்வமகன் அல்ல. டெஸ்ட் டியூப் பேபி தான். மன்னரைப் பார்த்து பயப்படுபவன் நான் இல்லை. எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். நான் எப்போதும் மக்களின் குரலாக இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response