மகா கும்பமேளாவில் பிரகாஷ்ராஜ் – பச்சைப் பொய் பேசிய பாஜக

பாஜகவை தொடர்ந்து விமர்சித்தும் ஒன்றிய அரசை துணிச்சலாக எதிர்த்தும் வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.அவர், தனது சமூகவலை தளப் பக்கத்தில் அவ்வப்போது ‘ஜஸ்ட் ஆஸ்க்கிங்’ என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கேள்விகள் கேட்டு வருகிறார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டு புனித நீராடினார் என்று சொல்லி அவர் நீராடுவது போன்ற புகைப்படத்தை நடிகரும் பாஜக பிரமுகருமான பிரசாந்த் சாம்பர்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.அதோடு, ‘இனிமேலாவது இவரது பாவங்கள் நீங்கட்டும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இதை உண்மை என நம்பி சமூக வலைத்தளங்களில் பிரகாஷ் ராஜை பாஜக ஆதரவாளர்கள் கேலி,கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

பிறகுதான் இது ஏஐ எனப்படும் நவீன தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி புகைப்படம் என்பது தெரிந்தது.

இந்நிலையில் இந்த போலி புகைப்படத்தை வெளியிட்ட பிரசாந்த் சாம்பர்கி மீது பிரகாஷ் ராஜ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், ‘இது போலிச் செய்தி. “போலி ராஜாவின்” (பிரதமர் மோடி) கோழைப் படையினருக்கு; அவர்களின் புனித பூஜையிலும் போலிச் செய்தி பரப்பி அசிங்கப்படுத்துவதே வேலையாகிவிட்டது. காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பிரபல நடிகரைப் பற்றி பொதுவெளியில் இப்படி அபாண்டமாகப் பதிவிடும் போக்கு பாஜகவினருக்கு மட்டுமே உரிய குணம் என்று பலரும் விமரிசித்து வருகிறார்கள்.

Leave a Response