அதிமுக அவமரியாதை செய்துவிட்டது – கிருஷ்ணசாமி வேதனை

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் நீண்டகாலம் கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியை அவ்விரண்டு கட்சிகளும் கழற்றிவிட்டுள்ளன.
இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய தமிழகம் கட்சியினரிடம் விருப்பமனு பெற்று,வேட்பாளர் நேர்காணல் நடத்தி வருகிறோம்.60 தொகுதிகளை அடையாளம் கண்டு போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்து வருகிறோம்.

2019,2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தோம்.அந்தக் கூட்டணியில் தொடரவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

புதிய தமிழகம் கட்சி 21 மாவட்டங்களில் உள்ள 120 தொகுதிகளில் வலுவாக இருப்பதால், 12 முதல் 15 தொகுதிகள் தரவேண்டும் எனவும், தேவேந்திர குல வேளாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தரவேண்டும் எனவும் கேட்டோம்.ஆனால் 5 தொகுதிகள் தருவதாகக் கூறிய அதிமுகவினர்,எங்களுக்கு பெரியபலம் இல்லாத திருவிடைமருதூர் போன்ற தொகுதிகளை தருவதாகக் கூறினார்கள்.நாங்கள் கேட்ட தொகுதிகளை தர முன்வரவில்லை.இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதிமுக அணியில் இடம்பெற வேண்டும் என பெருமுயற்சி எடுத்தோம்.கூட்டணிப் பேச்சுவார்த்தை நின்றுபோனது என்பது தேவேந்திர குல வேளாளர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.எங்களை அதிமுக அவமரியாதை செய்ததோடு,புறக்கணித்து விட்டதாக மிகப்பெரிய கொந்தளிப்பு உள்ளது.அதனால் எங்களது வலுவைக் காட்டும் வகையில் தனித்துப் போட்டியிட கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால், 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.

ஒருவேளை நாங்கள் கேட்கும் எண்ணிக்கையும்,இடமும் தர அதிமுக முன்வந்தால் மீண்டும் கூட்டணி சேர்வது குறித்துப் பரிசீலிப்போம்.எங்களைப் புறக்கணித்து இருப்பது,அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.கூட்டணியில் சேருமாறு பாஜக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.மாற்று அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனித்துக் களம் காண ஆயத்தமாகி வருகிறோம்.எந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response