
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தமுறை தொகுதி மாறுகிறார்.அவர் தற்போது நெல்லை தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.இந்தத் தேர்தலில் அதைவிட்டுவிட்டு சாத்தூருக்கு மாறப்போகிறார் என்று
செய்திகள் வந்தன.தற்போது அது உறுதியாகி இருக்கிறது.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலில் நெல்லை இடம்பெறவில்லை.அதற்குப் பதிலாக சாத்தூர்
இடம்பிடித்திருக்கிறது.
ஏன் இப்படி?
2001 சட்டபேரவைத் தேர்தல் முதல் தொடர்ச்சியாக நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன். ஆனால், ஒரு தேர்தலில் வென்றால் அடுத்த தேர்தலில் தோல்வி
என்பதுதான் நயினாரின் நிலையாக இருக்கிறது.
1962 க்குப் பிறகு நெல்லை தொகுதியில் ஒருமுறை வென்ற யாரும் அடுத்ததேர்தலில் வென்றதாகச் சரித்திரம்
இல்லை.இது நயினாருக்கும் அப்படியே பொருந்தி வருவதாலேயே இம்முறை தொகுதிமாறி அவர் சாத்தூரில் களமிறங்குவதாகச் சொல்கிறார்கள்.
திருநெல்வேலியில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம் மழுப்பலாகவே பதில் சொல்லி வந்த நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு
வங்கியைக் குறிவைத்தும் அங்கு இடம்பெயர்வதாகச் சொல்கிறார்கள்.
தொகுதி மாறப் போவதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் கடந்த 6 மாத காலமாகவே சாத்தூர்
தொகுதியில் வீடுபிடித்துக் குடியேறும் வேலைகளை சத்தமில்லாமல் செய்துவந்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
அத்துடன்,அவரது மகன் நயினார் பாலாஜி,சாத்தூர் தொகுதியில் நிகழ்ச்சிகளை நடத்துவதிலும்,முக்குலத்தோர் அமைப்புகளை கவனிப்பதிலும் அக்கறை காட்டி வந்தார் என்று சொல்லப்பட்டது.இதைவைத்து,நயினார் நெல்லையிலும் பாலாஜி சாத்தூரிலும் களமிறங்கப் போவதாகக் கூட செய்திகள் கசிந்தன.
அதேசமயம், மாநில பாஜக துணைத்தலைவரும் தனது நண்பருமான கோபால்சாமிக்கு இராஜபாளையம் தொகுதியைப் பெற்றுத் தருவதாக வெளியில் உறுதியளித்திருந்தாலும் உள்ளுக்குள் அவரை வளரவிடக்கூடாது என்று முடிவு செய்து அதைச் செயலாக்கியும் விட்டார்.இராஜபாளையம் தொகுதியை ஜான் பாண்டியனுக்குக் கொடுத்துவிட்டார்கள்.
நயினார் நாகேந்திரன் சொன்னதை நம்பி,இராஜபாளையம் தொகுதியில் கோபால்சாமி வாக்குச் சேகரிப்பிலும்
ஈடுபட்டிருந்தார்.இந்தநிலையில்,ஒரே (விருதுநகர்) மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை பாஜகவுக்குக் கேட்கமுடியாது என்பதால் சாத்தூரை மட்டும் பெற்றுக்கொண்டு நண்பரை ஏமாற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.


