திமுகவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் – காங்கிரசு தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.ஆகஸ்ட் 13 வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை முன்னிட்டு,வரும் 19 ஆம் தேதி ஒன்றிய அரசு சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அரசு அறிமுகப்படுத்த உள்ள மசோதாக்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.எனினும்,தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதா கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.எனினும்,நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால்,அரசியல் சாசன திருத்தம் கோரும் இந்த மசோதா நிறைவேறவில்லை.

திரிணமூல் காங்கிரசுக் கட்சி மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவும்,இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ளதன் காரணமாகவும் இந்த மசோதா இம்முறை நிறைவேற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பின்னணியில்,இந்தச்சிக்கல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரசு செய்தித்தொடர்பு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது….

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் திமுக ஒருபோதும் இடம்பெறாது.இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை என்பதால் அவை ஒன்றிணைய வாய்ப்பில்லை.

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பதும்,நாங்கள் தவெகவை ஆதரிக்கிறோம் என்பதும் உண்மைதான்.தவெக அரசில் எங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.எனினும்,நாங்கள் தொடர்ந்து திமுக எம்பிக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.
திமுகவுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.திமுக இன்னும் ஒரு எதிர்க்கட்சியாகவே உள்ளது. அது (மத்தியில்) ஆளும் கட்சியாகவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவோ மாறவில்லை.

மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதைப் படித்தேன்.பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே உடன்பாடு இல்லை என்பது அதில் இருந்து தெளிவாகிறது.தொகுதி மறுவரையறை மசோதா வரும்போது,திமுக அதற்கு எதிராக நிற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response