இலவசம் தரமாட்டோம் வருவாய்ப் பெருக்கம் தருவோம் – சீமான் உறுதி

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று மேச்சேரியில் பரப்புரை செய்தார்.

அப்போது, சீமான் பேசியதாவது….

ஆங்கிலம்தான் அறிவு என்று கருதிய மக்கள்,உலகின் தலைசிறந்த மொழியான தமிழ்மொழி பெருமை குறித்து உணரவில்லை.தமிழ்மொழி சிதைந்து அழிந்துகொண்டு வருகிறது.கர்நாடகாவிடம் இருந்து 500 டிஎம்சி பெற வேண்டிய நாம், 150 டிஎம்சி தண்ணீருக்காகக் கையேந்தி நிற்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,தண்ணீர் தேவையில் தன்னிறைவுத் திட்டம் கொண்டு வந்து கடலில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி ஏரிகள்,குளங்களை நிரப்பி,அடுத்தவரிடத்தில் கையேந்தி நிற்கிற நிலைமையை மாற்றுவோம். வேளாண்மையைக் கைவிட்டு நம் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்,ஆடு,மாடு வளர்ப்பது அரசுப் பணி என்று நாங்கள் சொல்கிறோம்.

நாங்கள் வந்தால் மிக்சி தருவோம்,கிரைண்டர் தருவோம்,அண்டா தருகிறோம்,ஐயாயிரம் தருகிறோம்,10,000 தருகிறோம்,பிரிட்ஜ் தருவோம்,டிவி தருவோம் என்றெல்லாம் சொல்லமாட்டோம்.நீங்களே அதனை வாங்கிக் கொள்கிற வேலைவாய்ப்பையும்,வருவாய்ப் பெருக்கத்தையும் ஏற்படுத்தில் கொடுப்போம்.

மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகின்ற அன்புமகள் வித்யாராணிக்கு வாக்களித்து வெற்றி அடையச் செய்யுங்கள். பிரபாகரன் என்றால் தீவிரவாதி,வீரப்பன் என்றால் சந்தனக் கட்டைகளைக் கடத்தியவன்,மாயாவி திருடன் என்று கட்டமைப்பார்கள்.

வீரப்பன் என்று சொல்லும்போதும்,பிரபாகரன் என்று சொல்லும்போதும் மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.வீரப்பன் வெளியே வந்து உண்மையைச் சொன்னால்,பல பேருடைய இரகசியம் வெளிவரும் என்று அவரை காட்டுக்குள்ளே வைத்து மோரில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டனர்.மோதி வெல்லாமல் மோரில் விஷம் வைத்துக் கொன்று, பீற்றிக்கொண்ட கோழைகள் இந்தநாட்டில் இருக்கின்றனர்.

வீரப்பனைக் கொன்றது எங்கள் ஆட்சிதான் என்று அதிமுக சொல்லமுடியுமா? வீரப்பன் இந்தநாட்டின் வனக்காவலன்.அவர் உயிரோடு இருக்கும்வரை 6 ஆயிரம் சதுரகிலோமீட்டர்,ஒரு கர்நாடகா காக்கைகள் கூட உள்ளே வந்ததில்லை.அவர் இறந்தபிறகு,ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரமுடியாது என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் சேலம் தெற்குத் தொகுதி வேட்பாளர் சோபியா வீரசமர், மேற்குத் தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார், வடக்குத் தொகுதி வேட்பாளர் குணசீலா, வீரபாண்டித் தொகுதி வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை செய்து அவர் பேசியது….

ஊழல் இல்லாத ஆட்சி மற்ற நாடுகளில் எப்படி நடக்கிறது என்பதை சமூக வலைதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளுங்கள்.வெளிநாடுகளில் அரசு நடத்தும் அனைத்துக் கட்சிகளும் தரமாக உள்ளது.ஆனால், இங்கே அரசு நடத்தும் அனைத்தும் தரங்கெட்டுக் கிடக்கிறது.எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு சாராயத்தை மட்டும் அரசு வைத்திருக்கிறது. தனியாரை விடச் சிறந்த சேவைகளை அனைத்துத் துறைகளிலும் வழங்கவேண்டும். அதற்கேற்ப மாற்றத்தை கொடுக்கவேண்டும்.தேர்தலில் போட்டியிட நான்கு கட்சிகள் இருந்தால் எந்தக் கட்சி சிறந்த ஆட்சி இருக்கும் என எண்ணி ஆதரவளியுங்கள்.

வாக்கு எனும் ஆயுதத்தை அநீதிக்கு எதிராக ஏந்துங்கள்,ஒவ்வொரு வாக்கும்தான் மாற்றத்தை உருவாக்கும்.நானே விவசாயம் செய்து நச்சு இல்லாத தூயஉணவை அளிப்பேன்.மின்உற்பத்தி,காற்றாலை மின்சாரத்தை நானே வழங்குவேன்.வேலை இல்லை என்ற சொல்லை மாற்றுவேன் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது….

பாஜக மதவாதக் கட்சி எனக்கூறி திமுக வாக்கு சேகரிக்கும்.மறுபுறம் காங்கிரசு பற்றி பாஜக பேசும்.இந்தநாட்டை நாசமாக்கியதே காங்கிரசுக் கட்சிதான்.கச்சத்தீவைத் தாரை வார்த்தது,நச்சுஆலைகளை விதைத்தது காங்கிரசு. திமுக எந்த வகையில் காங்கிரசை நியாயப்படுத்தி பேசமுடியும்? ஜிஎஸ்டி, நீட், என்ஐஏ போன்ற அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரசுதான்.

அதிமுகவும் திமுகவும் மறைமுகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.குறிப்பாக திமுக அமைச்சர்கள் போட்டியிடப் போகும் இடங்களில் பாஜக வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.திமுக அமைச்சர்கள் எங்கெல்லாம் போட்டியிடுகிறார்களோ அங்கெல்லாம் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

விஜய் இலவசங்கள் கூடாது எனக் கூறியவர், தற்போது இலவசங்களை அறிவித்துள்ளார். இலவசம் என்பது திட்டமல்ல; அது வீழ்ச்சிக்கு வித்தாகும். திமுக, அதிமுக, விஜய் யார் இலவசங்கள் அறிவித்தாலும் அந்தப் பணத்தை ஈடுசெய்ய எங்கிருந்து எடுப்பீர்கள். இலவசங்களை எதிர்ப்பவன் நான்.

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Response