வாசிப்பில் தடுமாற்றம் உள்ளடக்கம் அதைவிட மோசம் – சீமான் விமர்சனம்

விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.அதுகுறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை….

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது.மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ,புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ,மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும்,திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதிநிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது.தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு,இப்போது அவற்றை நிறைவேற்றும் திட்டமும்,நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது.

முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு.இத்தோடு, உயர்கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது.தொழில்வளர்ச்சித் துறைக்கு 1,419 கோடி ரூபாயும்,கைத்தறித் துறைக்கு 302 கோடி ரூபாயும்,நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. இவ்வாறாக,கல்வி,மின்துறை,தொழில் வளர்ச்சி,கைத்தறி,நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது.

தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும்,சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!

தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல்,வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு,பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவை குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு.மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக,தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.

சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக்கூறிவிட்டு,மாநிலஅரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும்.பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில்,குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப்பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால்,அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது.பிறந்தகுழந்தைக்குத் தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி,மக்களை அரசுமருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது,தங்கமோதிரம் மூலம் நாடச் செய்வதாகக் கூறுவது அவலநிலையின் உச்சம்.

மூன்றுமாதத்தைக்கூட நிறைவுசெய்யாத் தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும்.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு,அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை.நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையைத் தங்குதடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால்,நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது.

மொத்தத்தில்,தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ,மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ,நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ,கடன்சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள்,நடவடிக்கைகள் ஏதும் இல்லாது,பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response