நான் மனைவியுடன்தான் வாழ்கிறேன் மகள் இருக்கிறார் – உதயநிதி பேட்டி

நேற்று காலையில் சென்னையில் கைது செய்து இரவில் தஞ்சாவூரில் விடுவிக்கப்பட்ட உதயநிதி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

இந்த த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு,விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களை பட்டியலிட்டு,மேட்டூர் அணை திறக்கப்பட்டாததைச் சுட்டிக்காட்டி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.நான் பேசியதற்கு பதிலளிக்க வக்கில்லாமல்,நான் பேசாத ஒரு செய்தியை வெட்டி ஒட்டி,சில செய்திகளை சேர்த்திருக்கிறார்கள்.

நான் யாரையும் தவறாகப் பேசவில்லை.முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகதான் பேசினேன்.ஆனால்,தவறான செய்தியை தேசிய ஊடகங்கள்வரை கொண்டுசென்று அவதூறு பரப்பியிருக்கிறார்கள்.

நமக்கான நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப்பெற வக்கில்லாமல் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க தெம்பில்லாமல் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது நமக்கு வாய்த்திருக்கிற டம்மி முதலமைச்சர் தலைமையிலான அரசு.

சென்னையில் இருந்து ஒரு தீவிரவாதியைக் கூட்டிச்செல்வதுபோல,400 கி.மீ தூரம் கொண்டுசென்று,விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளைக் கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.இந்த நடவடிக்கையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.

நான் எந்தவிதமான தவறான எண்ணத்திலும் நேற்று (ஆகஸ்ட் 03) பேசவில்லை.யாரையும்,குறிப்பாக பெண்களை தாழ்த்திப் பேசவேண்டும் என்பது துளிகூட எண்ணவில்லை.என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை.

எனக்கு திருமணமாகி,என் மனைவியுடன்தான் நான் வாழ்கிறேன்.எனக்குப் பெண் குழந்தை இருக்கிறது.எனக்கு தங்கை இருக்கிறார்.அனைத்துப் பெண்களையும் நான் தாயாக,தங்கையாகத்தான் பார்க்கிறேன்.

எனக்கு இருக்கக்கூடிய ஒரே வருத்தம்,சில தலைவர்கள் நான் பேசியதை முழுமையாகக் கேட்காமலும், ஆராயாமலும்,நான் தவறாகப் பேசிவிட்டேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.ஆனால்,நான் விவசாயிகளுக்காகப் பேசினேனே தவிர,வேறு எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை.

விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக,இந்த தரம்கெட்ட அரசு என்னைக் கைது செய்தது.இந்தக் கைதுக்கு நான் என்றும் பயப்படமாட்டேன்.நான் பேசியதற்கு ஒரே பொருள்தான்,அதற்கு இரண்டு பொருள் எல்லாம் இல்லை. விவசாயிகளுக்காக நான் தொடர்ந்து பேசுவேன்.

தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை,சர்க்கஸ் கூடாரம்.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும்,அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும்தான் அவர்களின் நோக்கம்.

த.வெ.க செய்யும் திசைதிருப்பல் அரசியலை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.அவர்கள் நிச்சயம் தகுந்த பதில் அளிப்பார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் 41 உயிர்களைப் பலிகொடுத்துவிட்டு,பத்திரிகையாளர்களுக்குப் பயந்து புறமுதுகு காட்டி,இதே திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஓடிச்சென்று வீட்டில் பதுங்கிய தைரியசாலியான முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறார்.ஆனால்,அவரைப்போல் நாங்கள் என்றும் பயப்படமாட்டோம். மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response