தவெகவில் இணைந்தவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவேண்டும் – வேலுமணி திடீர் கோரிக்கை

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுமான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு வெளிப்படைக் கடிதம் கொடுத்துள்ளனர்.

அதில்,

2021 சட்டமன்றத் தேர்தலில் டிடிவி.தினகரன் அவர்களுடன் கூட்டணி வைக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும்,ஓபிஎஸ் அவர்கள் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசினப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.அன்று டிடிவி.தினகரன் அவர்களுக்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று நிராகரித்தீர்கள்.

2019 இல் அதிமுக தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தபோது,நம்மோடு கூட்டணியாக இணைந்து பயணித்த தேசிய முற்போக்கு திராவிட கழகம்,புதிய தமிழகம் கட்சி மற்றும் தனிக்கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெளியேற்றினீர்கள்.

2024 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் கூட்டணியாக நம்முடைய அனைத்துக் கோரிக்கைகளையும் செய்வதாகக் கூறியபோதும் தன்னிச்சையாக முன்யோசனை இல்லாமல் செயல்பட்டதால் தி.மு.க – காங்கிரசு கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றிபெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள்.அதுமட்டுமில்லாது உங்களுடைய இந்தத் தவறான முடிவால் பல அதிமுக வேட்பாளர்கள் 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழந்து நிற்கிறார்கள்.அதுபோன்று பா.ம.க கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்தபோதும்,ஒருமாத காலம் அதை உறுதிசெய்யாமல் காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம்.இப்படி தேடிவந்த பா.ஜ.க.,பா.ம.க போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள்.

அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பலமுறை பிரம்மாண்ட கூட்டணி அமைப்பதாக தெரிவித்ததோடு,கூட்டணிக்கு நம்மை நாடி வந்த தே.மு.தி.க மற்றும் புதியதமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள்.குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அதனால்,2021,2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல்,2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் கழகம் வெற்றிபெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும்,தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால்,தொடர் தோல்விகளைச் சந்தித்து அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையிலிருந்து மீண்டுவரமாட்டோமா? என ஏங்கி வருகின்றனர்.இந்நிலையில் கட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்து வந்த தலைமை நிர்வாகிகள்,மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருபவர்கள்,தாங்கள் தன்னிச்சையாக சுயநலத்தோடு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும்,தங்களை தமிழக முதல்வராகவும்,கழகப் பொதுச்செயலாளராகவும் அமரவைத்த கழகத்தின் மூத்தமுன்னோடிகளை வெளியேற்றியும்,புறக்கணித்தும்,தேர்தல் கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் முன்னெடுப்பதில் கழக முன்னோடிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதால், கட்சியினர் கடும்வேதனையோடும்,துயரத்தோடும் மாற்றுக்கட்சியில் கூட்டம் கூட்டமாக தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு கழகம் தொடர்ந்து பலவீனப்பட்டுவரும் இந்தச் சூழ்நிலையிலும் சிறப்பாக கழகப்பணிகளில் செயல்பட்டு வந்த கோவை,திருப்பூர்,நீலகிரி,கடலூர்,கள்ளக்குறிச்சி,திருச்சி,தஞ்சாவூர்,தென்காசி, விழுப்புரம்,திருப்பத்தூர்,தர்மபுரி,நாமக்கல்,கரூர்,புதுக்கோட்டை,பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர,பகுதி,பேரூராட்சி சார்பு அணி செயலாளர்கள்,எந்தவித காரணங்களுமின்றி கழகப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டு புதியவர்களை நியமித்து வருவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.இது கழகத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்பதே உண்மை.

அதிமுக பொதுச்செயலாளராகிய தாங்கள் கழக செயற்குழு,பொதுக்குழுவில் தங்களது கருத்துக்கு எதிராக யாரும் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கக்கூடாது என்று செயற்குழு,பொதுக்குழுவில் அனைவரின் பொதுவான கருத்தை வெளிப்படுத்தவும்,தங்களது செயல்பாடுகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் கட்சி எந்த நிலைக்குத் தாழ்ந்தாலும் நான் சொல்லுவதை மட்டும்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்களை கழக சட்டத்திட்டங்களுக்கு முரணாக கழகத்திலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள்.

தங்களால் நீக்கப்பட்டவர்கள் கழகம் துவங்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு முதல் கழகப் பணியாற்றியவர்கள் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள்,காலம் காலமாக,கழக வளர்ச்சிக்காக சிறை சென்று,பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டும்,கழகம் சந்தித்த அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவர்கள்,குறிப்பாக 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் சிறப்பாகச் செயல்பட்டு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத்தந்தும்,கழக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கும் காரணமானவர்கள் ஆவார்கள்.

மேலும்,மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தெய்வங்களான தலைவர்களின் மீதும்,கழகத்தின் மீதும் மாறாத பற்றும் விசுவாசம் கொண்டவர்கள் கட்சி சோதனைக் காலத்தை எதிர்கொண்ட போதெல்லாம், தங்களோடு பயணித்தவர்கள்.கழக வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்கள் என்பதை எல்லாம் மறந்துவிட்டு கழகத்தைப் பலவீனப்படுத்தும் வகையில்,கழகப் பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்கப்படும் நடவடிக்கைகளை கழகப் பொதுச்செயலாளர் மேலும் தொடரக்கூடாது.கழகத்தின் நலன்கருதி இதுவரை பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டும்.உங்களை தமிழக முதல்வராக்கிய சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் அவர்களையும்,அதேபோல கழகத்திலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் சேர்ந்தாலும் கூட அவர்களிடம் பேசி கழகத்தில் சேர்த்து கட்சியைப் பலப்படுத்தவேண்டும்.

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு 4 ஆண்டு 8 மாதம் இருக்கிறது.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் 6 மாதத்தில் வரவுள்ளது.இதில் கிளைக்கழகச் செயலாளர் மற்றும் அடிமட்டத் தொண்டன்வரை உள்ளாட்சிப் பதவிக்கு வருவார்கள்.இது ரொம்ப முக்கியமானதாகும்.இதற்கு கட்சியை பலபடுத்தியே ஆகவேண்டும்.நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்தும்,கழகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகள் குறித்தும்
பொதுச்செயலாளர் அவர்களால் மாவட்டவாரியான ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்,அழைக்கப்படுவதில்லை.சில மாவட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மாநில,மாவட்ட,ஒன்றியங்களில் சிறப்பாகக் கழகப்பணியாற்றுபவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? அவர்கள் கலந்து கொள்ளாத வகையில் பொறுப்புகளிலிருந்து விலக்கப்படுகின்றனர்.

அதிமுகவினை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உண்மையான அக்கறையும்,ஈடுபாடும் இருக்குமேயானால் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் வழியில் மறப்போம்,மன்னிப்போம் என்கிற அடிப்படையில் கழக நலன்கருதி கழகத்தினரிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் வெளிப்படும்பொழுது அவற்றை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் 13.05.2026 க்கு பிறகு கழகத்தின் பல்வேறு நிலைகளில் இன்றுவரை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டும்,கழகத்தில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பதவிகளை வழங்கி
பொதுச்செயலாளர், கழகத்தை வலுப்படுத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response