
மூத்தபத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை….
கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மூத்த பத்திரிகையாளரும்,நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபால் அவர்கள் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்,பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் பகைமையைத் தூண்டுதல்(BNS 352, 353(1)(b), 196) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இவற்றில் இரண்டு பிரிவுகள் பிணையில் வெளிவராத குற்றப்பிரிவுகளாகும்.
ஒரு யூடியூப் நேர்காணலில் முதமைச்சர் திரு.ஜோசப்விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்தவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளாக அச்சமின்றி அதிகார மையங்களின் தவறுகளை அம்பலப்படுத்தி,உண்மையை உரக்கச் சொன்ன துணிச்சலான பத்திரிகையாளராக திரு.நக்கீரன் கோபால் அவர்கள் அறியப்படுகிறார்.அதிகாரத்தில் யார் இருந்தாலும் தயக்கமின்றி கேள்வி எழுப்புவது,உண்மைகளைத் தேடி வெளிக்கொணர்வது ஆகியவை அவரது பத்திரிகைப் பணியின் அடையாளங்களாகும்.
அத்தகைய மூத்தபத்திரிகையாளர் மீது அவர் தெரிவித்த கருத்துகளுக்காக வழக்கு பதிவு செய்திருப்பது நக்கீரன் கோபால் என்ற பத்திரிகையாளர் மீதான நடவடிக்கை மட்டுமல்ல,ஒட்டுமொத்த ஊடக உலகிற்கே விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
அண்மைக் காலமாக,தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்ததற்காகவே பலர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.கருத்து வேறுபாடுகளை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வதற்குப் பதிலாக,காவல்துறை மற்றும் குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்தும் இந்தப்போக்கு,ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல.இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையை நசுக்குவதுடன்,அச்சுறுத்தல் மூலம் விமர்சனக் குரல்களை மௌனப்படுத்தும் முயற்சியாகும்.
ஒரு பத்திரிகையாளரின் கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு பதிலாக குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது ஊடகச்சுதந்திரத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயலாகும். ஜனநாயகத்தின் வலிமை என்பது விமர்சனங்களை எதிர்கொண்டு பதிலளிப்பதில்தான் உள்ளது என்பதை தவெக அரசு உணரவேண்டும்.
எனவே,மூத்த பத்திரிகையாளர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை உடனடியாக திரும்பப்பெறுமாறு காவல்துறைக்கு தமிழ்நாடு முதமைச்சர் திரு.ஜோசப்விஜய் உடனடியாக உத்தரவிட வேண்டுமென்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அதேபோல்,பத்திரிகையாளர்கள் அச்சமின்றி கடமையைச் செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யவும்,அரசை விமர்சிப்பதை குற்றமாக்கும் போக்கை முற்றிலுமாக கைவிடவேண்டும் என்றும் முதமைச்சர் அவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


