
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.அதன்படி விஜய் தமிழக முதல்வரான பிறகு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி, இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து, 22 கேரட் 916 ஹால் மார்க் தரச்சான்றுடன் மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 755.83 கோடி ஒதுக்கப்பட்டது.
அதோடு முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால்,செப்டம்பர் 18 அன்றுதான்,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக்கூட்டத்தின் பின்,தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தினை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.அதிகாரிகள்,சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.மேலும்,இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவிருந்த தங்கமோதிரங்களும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், தொடக்க விழா நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெறவிருந்த விழா,மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்புக் காரணங்களுக்காக விழா நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து,விழாவை உசிலம்பட்டியிலிருந்து மதுரைக்கு மாற்றியது ஏன்? முதல்வர் விஜய் ஆட்சியில் முதல்வர் விஜய்க்கே பாதுகாப்பு இல்லையா? என்கிற கேள்விகள் சமூகவலைதளங்களில் நிரம்பியிருக்கின்றன.


