மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் எச்.பி.எஸ்.கில் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மதுரை வருமான வரித்துறை தலைமை ஆணையர் சஞ்சய்ராய், முதன்மை ஆணையர் டி.வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதுடெல்லி கூடுதல் பொது இயக்குநர் ரித்து சிங் சர்மா, சென்னை நிர்வாக ஆணையர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.மதுரை வருமானவரித் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார்.
இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது….
நானும் படிப்பை முடித்துவிட்டு சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டிடம் 6 மாதம் வேலை பார்த்து பெரிய நிறுவனங்களில் தணிக்கைக்குச் சென்றுள்ளேன்.அரசு விசயங்களைத் தெரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். ஆனால், வருமான வரித்துறை சார்பில் இணையதளத்தில் எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இங்கு குழந்தைகளுக்கும் புரியும் வகையில் கார்ட்டூன் வடிவில் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. பான் கார்டு விண்ணப்பிக்க இந்தியிலும், ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.
நமது உரிமைக்காக அரசிடம் எந்தளவுக்குக் கோரிக்கை வைக்கிறோமோ, அந்தளவுக்கு வரி செலுத்துவதும் அவசியம். அது நமது கடமை என நம்புகிறேன்.
ரொம்ப நாளாக என் மனதில் ஒரு கோரிக்கை உள்ளது.அது என்னவென்றால்? ஒரு காலத்தில் நன்றாகச் சம்பாதித்து வரி செலுத்தி இருப்போம். ஒரு கட்டத்தில் செலுத்த முடியாத நிலை உருவாகும். எனவே நல்ல முறையில் வரி செலுத்திய குடிமகன்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியது மிக்க மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.