தமிழ்நாட்டை பலவீனமாக்கும் ஒன்றிய சதி – அமைச்சர் எதிர்ப்பு

சனவரி 29 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழ்நாடு பெரிதும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அது என்ன?

2019 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா தலைநகரான சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில், வசிப்பிட அடிப்படையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சுதான்ஷூ தூலியா, எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் சனவரி 29 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், நாம் அனைவரும் இந்தியாவில் வசித்து வருகிறோம். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான உரிமையை, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளில், ஒரு மாநிலத்தில் வசிப்போருக்கு குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு வழங்கலாம். முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14-க்கு எதிரானது. மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவப்படிப்பு இடங்களையும் நீட் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது மாநில உரிமையை முற்றாகப் பறிக்கும் தீர்ப்பு என்கிற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்துக் கூறியதாவது….

மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசுக்குத் தாரை வார்க்கும் இந்தத் தீர்ப்பை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அல்லது தமிழ்நாட்டில் பிறந்த மாணவர்களுக்காக 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தில் உள் ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக்கட்டமைப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 2,294 முதுநிலை மற்றும் டிப்ளமோ மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதுவரை 50 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் 1,087 பேர் ஆண்டுதோறும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு எதிர்வரும் ஆண்டுகளில் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் 1,200-க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாய நிலை உருவாகியிருக்கிறது. இந்த இடங்கள் சொந்த மாநிலத்துக்கு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதால் அந்தந்த மாநில உரிமைகள் பாதிக்கப்படும்.

இந்த ஆண்டு மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆம் சுற்று நடைபெற உள்ளது. மாணவர்கள் ஏராளமான பேர் பயிலவும் தொடங்கி விட்டனர். எனவே இந்தத் தீர்ப்பினால் இந்த ஆண்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றாலும் முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு, இந்தத் தீர்ப்பு சம்பந்தமாக மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது என்கிறார் அமைச்சர்.அப்படிப்பட்ட கட்டமைப்பை முற்றாகத் தமிழ்நாட்டிடம் இருந்து பறிக்க வகை செய்யும் இந்தத் தீர்ப்பு.
இது தமிழ்நாட்டை பலவீனமாக்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் சதிகளுக்குத் துணை போகக் கூடியது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response