யாழ் திருவள்ளுவர் மையத்தை ஆக்கிரமித்த சிங்கள அரசு – அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் இந்திய ஒன்றிய அரசு நிதியில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் நிர்வாகத்தை யாழ்ப்பாண மாநகர நிர்வாகத்திடம் கொடுக்காமல் கொழும்பிலிருந்து நிர்வகிக்கப்படுமென சிங்கள அரசு முடிவெடுத்திருக்கிறது.

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தினை மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது ஜேவிபியின் இனவாதத்தின் உண்மைமுகம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டினார்.

மே 27 அன்று யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழ்மக்களுக்காக யாழ் மாநகரசபைக்குச் சொந்தமாக இந்திய நிதிஉதவியின் கீழ் கட்டப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தமிழ்மக்களுக்குத் தனியான ஒரு அடையாளம்.
இந்த அடையாளத்தை அழிக்கவேண்டும் என்பதற்காக புத்தசாசன அமைச்சையும் இணைத்து மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது தேசிய மக்கள் சக்தி என்கின்ற போர்வையை போட்டுள்ள ஜேவிபியின் இனவாதத்தின் உண்மைமுகம்.

ஏனெனில் வடக்கு கிழக்கில் தமிழ்மக்களுக்கான மத மற்றும் கலாச்சார அடையாளங்களை அழிப்பதிலும் திரிவுபடுத்துவதிலும் புத்தசாசன அமைச்சு அதன் கீழ் உள்ள தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி பூரண ஆதரவை வழங்கி வருவதோடு ஜேவிபியின் சித்தாந்தத்தை தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு தொடர்ச்சியாகவே திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை தமிழ்மக்களிடமிருந்து பிரிப்பதற்காக நம்பிக்கை பொறப்பு நிதியம் என்ற போர்வையில் புத்த சாசன அமைச்சு உள்வாங்கி உள்ளது.

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான மாகாண அதிகாரங்களுக்கு கீழ் உள்ள கட்டமைப்பு ஒன்றினை மத்தியின் அதிகார வரம்புக்குள் உள் ஈர்ப்பது எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஆகவே, குறித்த விடயம் தொடர்பில் தமிழ்மக்களும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் விழிப்பாக இருப்பதுடன் ஜேவிபியின் உண்மை முகம் தொடர்பில் மக்களும் விழிப்படைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்காக இந்திய ஒன்றிய அரசு அமைத்துள்ள திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை சிங்கள அரசு ஆக்கிரமித்திருக்கும் தகவல் வெளியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைக் உருவாக்கியுள்ளது.

Leave a Response