ஒளிப்பதிவாளர் இயக்குநர் செழியன் மறைந்தார்

திரைப்பட இயக்குநர்,ஒளிப்பதிவாளர் செழியன் இன்று அதிகாலை காலமானார்.புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார். தமிழ்நாட்டின் சிவகங்கையில் பிறந்தவர்.தேசிய விருது பெற்ற இயக்குநர்,எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.கட்டடப் பொறியியல் படிப்பை முடித்தவர்.அவர் மனைவி பெயர் பிரேமா.மகள் பெயர் அஜிதா.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகத் தன் திரைப் பயணத்தைத் தொடங்கினார். 
பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ (2007) திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து,தம்பி,தென்மேற்குப் பருவக்காற்று,பரதேசி,தாரை தப்பட்டை,ஜோக்கர்,கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

‘டூலெட்’ என்ற படத்தை இயக்கினார்.இந்தப் படம் 65 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.மிலன் சர்வதேச திரைப்பட விழாவில் இதற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் கிடைத்தது. 

அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரைப் பற்றிய ஆவணப்படங்களையும் தயாரித்துள்ளார். ஆனந்த விகடன் இதழில் உலகத் திரைப்படங்கள் குறித்து இவர் எழுதிய தொடர்,பின்னர் ‘உலக சினிமா’ என்ற புத்தகத் தொகுப்பாக வெளியானது.

இது தவிர ‘கார்மோனியம்’ என்ற சிறுகதைக்காக கதா விருதும் பெற்றுள்ளார். தி ஃபிலிம் ஸ்கூல்,புதிய தலைமுறை சினிமா ஆர்வலர்களுக்காகத் திரைப்படப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இப்பள்ளியின் மூலம் பயின்ற 34 மாணவர்கள் ஒரே நேரத்தில் 34 சுயாதீனத் திரைப்படங்களை இயக்கும் புதிய முயற்சியை சமீபத்தில் தொடங்கினார்.

தமிழ் சினிமாவின் அறிவுசார் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர். சம்பள விசயத்தில் கறாராக இருக்கமாட்டார். பல படங்களில் சம்பளம் வாங்காமலேயே பணியாற்றி உள்ளார்.அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.57 வயதில் மறைவு என்பது இயற்கையின் கொடூரமன்றி வேறென்ன?

– மீரான்

Leave a Response