தலைமைச்செயலகத் திட்டம் ஆணவப்போக்கு – சீமான் எதிர்ப்பு

கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம்; அரசுக்கு வேறு சட்டமா? பட்டினப்பாக்கம் நிலப்பயன்பாட்டு மாற்றத்தை தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றுவதற்குச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இடநெருக்கடி மிகுந்த பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைக்க மீனவச்சொந்தங்களும்,பொதுமக்களும், அரசியல்கட்சிகளும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துவரும் நிலையில்,நிலப்பயன்பாடு மாற்ற நடவடிக்கைகளை தவெக அரசு முன்னெடுப்பது,மக்களின் உணர்வுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்காத ஆணவப்போக்கையே காட்டுகிறது.

குடியிருப்பு,பொழுதுபோக்கு மற்றும் திறந்தவெளி வகைப்பாடுகளில் இருந்த நிலத்தை இடைத்தேர்தல் முடிந்த அடுத்தநாள் வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன? தவெக அரசுக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் இடைத்தேர்தலுக்கு முன்பே ஏன் மாற்றவில்லை?

ஒருபுறம் நீலாங்கரை,ஈஞ்சம்பாக்கம்,உத்தண்டி ஆகிய பகுதிகளில் கடற்கரை விதிமீறல் என்று கூறி மக்கள் கட்டிய 129 கட்டிடங்களை காலி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.

மறுபுறம் கடற்கரை பகுதியான பட்டினப்பாக்கத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைச்செயலகம் கட்ட வேக வேகமாக அரசே முயல்வது நியாயம்தானா? கடற்கரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு மட்டும்தானா? அரசுக்கு இல்லையா? மக்களுக்கு ஒரு நீதி? அரசுக்கு வேறு நீதி என்பது நீதியல்ல.பெரும் அநீதி!

தனியார் கட்டடங்களுக்குக் கடலோரப் பாதுகாப்பு விதிகளைச் சுட்டிக்காட்டும் அரசு,தனது திட்டத்திற்கான கடலோர ஒழுங்குமுறை அனுமதிகள்,சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளை மக்களின் பார்வைக்கு முன்வைக்க வேண்டாமா? நிலப்பயன்பாட்டின் பெயரை மாற்றிவிட்டால் மட்டும் கடற்கரையின் இயற்கைத் தன்மையும் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளும் மாறிவிடுமா?

பட்டினப்பாக்கம் என்பது அரசின் வரைபடத்தில் குறிக்கப்பட்ட வெறும் நிலப்பரப்பு அல்ல! அது மீனவ மக்களின் வாழ்வோடும் தொழிலோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த உயிர்நாடி பகுதி.எனவே,கடலுக்குச் செல்லும் வழிகள்,படகுகளை நிறுத்தும் இடங்கள்,மீன்பிடித் தொழிலுக்கான தேவைகள்,பொதுமக்களின் கடற்கரை அணுகல் ஆகியவை உறுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.அதை பாதிக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சியும் அதிகாரமும் வழங்கப்படுகிறதே தவிர,அவர்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி,வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டங்களைத் திணிப்பதற்காக அல்ல. மக்கள் கொடுத்த ஆட்சியை வைத்துக்கொண்டு மக்களையே வஞ்சிப்பது மாபெரும் துரோகம்!

ஆகவே,தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தி, அந்நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மாற்றும் ஒப்புதலை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இல்லையென்றால்,மீனவச்சொந்தங்களின் துணையுடன் மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசுக் கட்டடத்தின் பிரம்மாண்டத்தைவிட மக்களின் வாழ்வும் உரிமைகளுமே உயர்ந்தவை! மக்களை வஞ்சிக்கும் வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஏற்காது!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response