தேர்தல் மோசடி மூலமே தவெக வெற்றி – அதிரவைக்கும் சான்றுகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்) முறைகேடுகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக எடுத்த முடிவுகள் காரணமாக ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக,தேர்தல் ஆணையர்கள் சுக்பீர்சிங் சாந்து மற்றும் விவேக்ஜோஷி பதிவு செய்த 14 எதிர்ப்புகள் மற்றும் ஆட்சேபங்களையும் மீறி ஞானேஷ்குமார் முடிவுகளை எடுத்துள்ளார்.படிவம் 6 மாற்றங்கள் செய்துள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் உச்சநீதிமன்றமும் திருத்தப்பட்ட படிவம் 6 க்கு ஒப்புதல் தரவில்லை என திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இந்தநிலையில்,கடந்த ஏப்ரலில் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற எஸ்ஐஆர் பணியின் போது 74.07 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டும் 10 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வில்,எஸ்ஐஆரில் வாக்காளர் நீக்கம் குறைவாக இருந்த தொகுதிகளில் தவெக வெற்றி பெறுவதில் சிரமப்பட்டுள்ள நிலையில்,அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் இந்தக்கட்சி எளிதாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கையையும்,எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளர் எண்ணிக்கையையும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஒப்பிட்டு,வாக்காளர் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துள்ளது என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில்,மொத்தம் உள்ள 234 தொகுதிகளில்,19 தொகுதிகளில் 10,000 வாக்காளர்கள் வரை மட்டுமே குறைந்திருந்தது.
இந்த 19 தொகுதிகளில்,தவெக – 2,திமுக – 7,அதிமுக -6 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ன.

இதுபோல்,10,000 முதல் 20,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 80 தொகுதிகளில்,தவெக – 22,திமுக- 20,அதிமுக – 24,இதரகட்சிகள் -14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

66 தொகுதிகளில்,20,000 முதல் 30,000 வாக்காளர்கள்வரை குறைந்திருந்தனர்.இந்தத்தொகுதிகளில் தவெக – 32, திமுக – 21,அதிமுக – 11,இதர கட்சிகள் – 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

எஸ்ஐஆருக்கு முன்னும் பின்னும் ஒப்பிடும்போது 37 தொகுதிகளில்,30,000 முதல் 50,000 வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டிருந்தனர்.

இங்கு தவெகவுக்கு பெரிய அளவில் சாதகமாக இருந்துள்ளது.அதாவது இந்தத் தொகுதிகளில், தவெக -24, திமுக – 8, அதிமுக – 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.இதுபோல்,50,000 முதல் 80,000 வரை வாக்காளர்கள் நீக்கப்பட்ட 22 தொகுதிகளில் தவெக – 18, திமுக – 3, அதிமுக – 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

இதை விட முக்கியமாக 10 தொகுதிகளில் 80,000க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.இந்த 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று விட்டது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டது.இதில் 10 மாவட்டங்களில் அடங்கிய சுமார் 103 தொகுதிகளில் 10 விழுக்காட்டுக்கு மேல் 35 விழுக்காடுவரை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 26 தொகுதிகளில் 25% அல்லது அதற்குமேல் குறைந்துள்ளது.உதாரணமாக ஆயிரம்விளக்கு(35.4%),அண்ணாநகர் (35.3%),திருப்பூர் (தெற்கு) (28.9%),பெரம்பூர் (25.1%) உள்ளிட்ட தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 25 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.சென்னையில் மட்டும் 6 தொகுதிகளில் 33 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் நடத்தியதே எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காகத்தான் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வரும் நிலையில்,முக்கிய ஆதாரமாக இந்த புள்ளி விவரம் பார்க்கப்படுகிறது.

இந்தச்சிக்கலைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் கரப்பான் பூச்சி கட்சி,தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.சிஜெபி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையில் நடந்த போராட்டத்தில் ஞானேஷ்குமாரை‘வாக்குத்திருடன்.ஆட்சித் திருடன்’ என விமர்சித்து முழக்கம் எழுப்பினர்.பாஜவைத் தீவிரமாக எதிர்த்த மு.க.ஸ்டாலின்,பினராயி விஜயன்,மம்தா பானர்ஜி ஆகியோர் தோற்கடிக்கப்பட்டனர்.இது எதேச்சையாக நடந்தது அல்ல.எஸ்ஐஆர் மூலம்,பலம் வாய்ந்த மாநிலங்களைத் தோற்கடிப்பதே பாஜகவின் நோக்கமாக இருந்தது என அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

வாக்குச் செலுத்த முடியாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு கட்சியை வீழ்த்த முன்னரே திட்டமிட்டு இதுபோன்று செய்யப்பட்டுள்ளது.இலட்சக்கணக்கான மக்கள் சாரை சாரையாக வந்தும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிட்டனர்.இதுதான் மேற்கு வங்கம், கேரளம்,தமிழ்நாடு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளன.அதேநேரத்தில் அசாமில் பாஜகவையும், புதுச்சேரியில் பாஜக கூட்டணியையும் மட்டும் வெற்றிபெற வைத்துள்ளனர் என சிஜெபியின் அபிஜீத் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.இதே கருத்தை பல்வேறு கட்சித் தலைவர்களும் முன்வைத்துள்ளனர்.

இந்த எஸ்ஐஆர் மூலம்,தமிழ்நாட்டில் பாஜக எதிர்பார்த்தபடியே திமுகவை தோல்வியடையச் செய்துள்ளனர். இதனால் தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க ஓட்டுத்திருட்டில் ஈடுபட்டுள்ளது.இதன்மூலம் அரசியலமைப்பு உரிமையைப் பறித்துள்ளனர்.எனவேதான் தேர்தலை இரத்து செய்துவிட்டு நேர்மையாகத் தேர்தலை நடத்த சிஜேபி மற்றும் பல்வேற கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,தமிழ்நாடு,மகாராஷ்டிரா,மேற்கு வங்க மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகேடுகள் தொடர்பான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்,உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மீதான மேற்கண்ட ஆய்வு, இந்த முறைகேடுகளை நிரூபிப்பது போல அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response