இரண்டு தொகுதிகளிலும் தவெக தோற்கும் – பெ.சண்முகம் கணிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய பொதுவுடைமைக்கட்சி வேட்பாளர் இலட்சுமணனை ஆதரித்து மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் தாராபுரம் புதுக்காவல்நிலைய வீதியில் செப்டம்பர் 29 இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது….

தவெக தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளும்,உறுதிமொழியும் அளிக்கப்படாமல்தான் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் 2 பெண்களும் ராஜினாமா செய்தார்களா? என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய்யோ அல்லது மற்ற அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை.

மீண்டும்,மீண்டும் அவர்கள் சொல்வது திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது என்கின்றனர். சொல்லப்போனால் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை தொடர்பான வாக்கெடுப்பு முடிந்ததற்கு பின்னர்தான் தவெகவில் இணைந்துள்ளனர்.ஆட்சி அமைக்க பெரும்பான்மையில்லாமல் விஜய் தேடிக்கொண்டிருந்தபோது அவர்கள் வந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆட்சி அமைத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு பல நாட்கள் கழித்துத்தான் இருவரும் வருகிறார்கள்.ஆகவே,தாராபுரம்,மதுராந்தகம் தொகுதியில் இரு பெண்களும், முதல்வர் விஜய்,மற்ற அமைச்சர்களும் சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது என்று தீர்மானித்தோம்.நம்மை எதிர்த்து 3 அணிகள் களத்தில் உள்ளன.திமுக,தவெக,அதிமுக-பாஜக என 3 அணிகளும் இடதுசாரிகளை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.இதில்,அதிமுக-பாஜக கூட்டணியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறோம்.வெறுப்பு அரசியலை நாடு முழுவதும் பரப்பி மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியது பாஜக.ஆகவே,அத்தகையை கட்சியுடன் உடன்பாடு செய்து கூட்டணியாக தொடர்ந்து பயணித்து வருகிறது.இந்தக் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கு முன்பாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் வலிமையாகப் போராடியவர்கள் இடதுசாரிகள்தான் என்பதை நான் இங்கு பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில்….

அதிமுகவின் சார்பில் வென்ற 2 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் ஆதாயம் கருதி ராஜினாமா செய்ய வைத்து மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்தான் இது.

இதற்கான முழுப் பொறுப்பையும் தவெகதான் ஏற்கவேண்டும்.பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படாது என்கிற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு,அரசாணை எண் 564ஐ திரும்பப் பெறவேண்டும்.மீறி முயற்சித்தால் நிச்சயமாக,மீனவ மக்களோடு,பொதுமக்களோடு சேர்ந்து தடுத்து நிறுத்துகிற நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.இந்த 4 மாத கால தவெக ஆட்சியினுடைய செயல்பாடு மக்களுக்குப் பாதகமான, இடதுசாரிகளுக்கு எதிரான பல்வேறு உத்தரவுகளையும் சட்டங்களையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஆகவே,பொதுத்தேர்தலுக்கு முன்பாக தவெக கட்சிக்கு ஆதரவான ஒரு நிலைமை என்பது இப்போது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிற வேட்பாளர்கள் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்பது அதற்கு மிகச்சிறந்த சாட்சி.தவெக ஆட்சிக்கு எதிரான ஒரு முடிவாகத்தான் இரண்டு தொகுதியினுடைய தேர்தல் முடிவுகளும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response