
நேற்று சேலத்தில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற ஒரு மகிழுந்தை வழிமறித்து கரூர் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது அந்த மகிழுந்தில் ரூ.1 கோடி இருந்தது தெரியவந்தது.அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர். மகிழுந்தில் வந்த சுப்பிரமணி என்பவரிடம் கரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அதில், அந்தப் பணம் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமாரனுக்குச் சொந்தமானது என்கிற தகவல் கிடைத்ததெனச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து கரூர் காவல்துறையினர் தாராபுரம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.அதன்படி அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமாரனை கைது செய்தனர்.பின்னர் அவரை தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தத் தகவல் அறிந்த தாராபுரம்,மூலனூர்,குண்டடம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த அதிமுகவினர் தாராபுரம் காவல் நிலையம் முன் திரண்டு மாவட்டச் செயலாளரை விடுவிக்கக்கோரி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.
அந்தநேரத்தில் அங்கு தனது பரப்புரை வாகனத்துடன் டிடிவி.தினகரன் சென்று அவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றிருக்கிறார்.டிடிவி.தினகரன் காவல்நிலையத்திற்கே வந்து அதிமுக மாவட்டச் செயலாளரை அழைத்துச் சென்றது அதிமுக தொண்டர்களை மிகுந்த உற்சாகத்துக்குள்ளாக்கியுள்ளது என்கிறார்கள்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில்,
சேலத்திலோ,கோவையிலோ யாரோ கொண்டு சென்ற பணத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்தான் பொறுப்பு எனக்கூறி அவரைச் கைது செய்து அதிமுகவின் பிரசாரத்தை முடக்க நினைக்கிறார்கள். நாங்கள் நினைத்தால் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நடக்காமல் தடுத்துவிட முடியும் என்றார்.


