முதன்முறையாக உண்மை பேசிய விஜய் – கனிமொழி வாழ்த்து

மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து நேற்று தி.மு.கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது….

ஒருமுறை பரிதாபப்பட்டு நீங்கள் வாக்களித்தால் தமிழ்நாடே போய்விட்டது.இடைத்தேர்தலும் வந்துவிட்டது. இப்போதும் நீங்கள் பரிதாபப்பட்டால் மீண்டும் இங்கு இடைத்தேர்தல்தான் வரும்.வண்டலூர் அருகே, 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளிக்கூடத்திலேயே பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.முதலமைச்சர் வருகைக்காக இந்தக் கொடூரத்தை மூடிமறைக்க,தேர்வுக்குப் பயந்து பொய் சொல்வதாக,பாதிக்கப்பட்ட மாணவி மீது இந்த அரசு குற்றம்சாட்டுகிறது.

வீட்டில் இருந்த குழந்தையைக் கடத்திச் சென்று வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.இதுவரை இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் வெளியே சொல்லவில்லை.நண்பாஸ்,நண்பிஸ் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய்,பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஒரு ஆறுதல் செய்தியைக் கூடச் சொல்லவில்லை.ஆனால், நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்,பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நாங்கள் இருக்கிறோம்” என்று அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தார்.இதுதான் எங்கள் தலைவர்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகச் சிந்திக்கக்கூடிய,அவர்களது வலிகளை மனதில் ஏந்தக்கூடிய ஒரே தலைவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.

திராவிட மாடல் ஆட்சியில் கல்வி,மருத்துவம் என அனைத்திலும் முதலிடத்தில் இருந்தோம்.ஆனால்,த.வெ.க ஆட்சியில் விலைவாசி உயர்வில்தான் முதலிடத்தில் இருக்கிறோம்.தேசிய சராசரி 4.45%.ஆனால்,தமிழ்நாடு 5.44%. ப்ரோ விஜய் ஆட்சியில் விலைவாசி நன்றாக உயர்கிறது.இதுதான் இந்த ஆட்சியின் ஒரே சாதனை.

சினிமாவில் போராடுவதைப் போல,மக்களுக்காகப் போராடுவேன் எனக்கூறி ஆட்சிக்கு வந்த விஜய்,நாம் எல்லாம் எதிர்த்த,பா.ஜ.க கொண்டுவந்த விபிஜிராம்ஜி திட்டத்தை ஆதரித்தார்.இத்திட்டத்தில் ஊதியம் கிடைக்காமல் மக்கள் இன்று அவதிப்படுகிறார்கள்.இதுதான் விஜய் மக்கள் மீது வைத்துள்ள பாசம்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று கேட்டால் கஜானா காலி என்கிறார் விஜய்.ஆனால்,ரூ.1,200 கோடியில் மீனவர்களின் வாழ்க்கையை அழித்துப் புதிய தலைமைச்செயலகம் கட்ட மட்டும் முதலமைச்சருக்குக் கஜானா இருக்கிறது.

மக்களிடம் செல்லுங்கள்,மக்களோடு இருங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை இன்று தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் பேசியிருக்கிறார்.மக்களோடு இருப்பவர் கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது ஓடி ஒளிந்து இருக்கமாட்டார்.நடுஇரவாக இருந்தாலும் ஓடிச்சென்று,41 குடும்பங்களுக்கும் எங்கள் தலைவர் ஆறுதல் சொன்னதைப்போலச் சொல்லியிருப்பார்.நீங்கள் மக்களோடு இருக்கும் இலட்சணத்தைத்தான் நாங்கள் மதுரையில் பார்த்தோமே.கரூர் வடு ஆறுவதற்குள் 15 பேர் மயங்கி விழுந்தார்கள்.இந்தத் தவறுக்கு ஒரு மன்னிப்புக் கேட்க மனமில்லாத ஒருவர்,மக்களுடன் இருப்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

சினிமாவில் நடித்தபோது ரூ.300 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு,வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த காருக்கு வரிகட்ட முடியாது என்று நீதிமன்றம் சென்றவர்தான் சுவீட் ப்ரோ.ஆனால்,நீதிமன்றம் திட்டிய பிறகு அபராதம் கட்டிய நீங்கள்,ஊழலைப் பற்றிப் பேசலாமா?

எங்களையெல்லாம் கொன்று புதைத்தாலும் நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம் என மீனவர்கள் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகிறார்கள்.இதுகுறித்துக் கேட்டால், “முதலமைச்சருக்குத் தெரியாமல் அரசாணை வெளியாகியிருக்கிறது” என்கிறார்கள்.அது எப்படி முதலமைச்சருக்குத் தெரியாமல் அரசாணை வெளியாகும்?

பாரதிதாசன் என்ற மாணவர் கண்ணீர்விட்டுக் கூறிய பிறகுதான்,கல்விநிதியைக் கொடுக்கும் அளவிற்கு இந்த அரசுக்கு மனம் இருக்கிறது.நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் கொடுப்போம் என்று சொன்னார் நம் தலைவர்.பிறகுதான் அந்த மாணவனுக்குக் கல்விநிதியைக் கொடுத்தார்கள்.

இன்றைக்கு ஓர் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் நமது சுவீட் ப்ரோ விஜய்.பா.ஜ.க.வின் இன்னொரு கிளைதான் த.வெ.க. என்ற உண்மையைச் சொன்ன விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்.ஏனென்றால், முதல்முறையாக உண்மையைப் பேசியிருக்கிறார்,

தாராபுரம் பிரச்சாரத்தில்,அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒரு அழைப்பு வருகிறது.பிறகு,அவர் வேட்பாளர் சத்தியபாமாவிடம் ஏதோ ஒன்று சொல்கிறார்.பின்னர், அடுத்த நொடியே அவர் அழுகிறார்.உடனே சுவீட் ப்ரோ ஆறுதல் சொல்கிறார்.அரசியலில் இப்படி ஒரு நாடகத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response