தென்மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு – சூழ்ச்சியா?

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின், இந்திய ஒன்றியத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை சராசரியாக ரூ.3 உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

கடந்த 12 நாட்களில் நேற்று 6 ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசும், டீசல் லிட்டருக்கு 32 காசும் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.98 ஆகவும் உயர்ந்துள்ளது.

இப்படி நாள்தோறும் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இதனால்,அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன்பலனை மக்களுக்குக் கொடுக்கவில்லை.விலை உயரும்போது மட்டும் அதன் விளைவை மக்கள் மீது திணிப்பது என்ன நியாயம்? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விலை உயர்வு மட்டுமின்றி சரியான விநியோகம் செய்யாமல் பெரும் நெருக்கடியை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன என்றும் சொல்கிறார்கள்.

மதுரை தொடங்கி விருதுநகர் வரை தென்மாவட்டங்களில் எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக நடத்தும் நிலையங்களுக்கு மட்டும் பெட்ரோல் டீசல் விநியோகம் சரியாக நடைபெறுகிறது என்றும் மற்ற நிலையங்களுக்கு விநியோகம் செய்வதில்லை.இதனால் அந்தந்தப் பகுதி மக்கள் மட்டுமின்றி அந்த நிலையங்களை நட்டப்பட்டேனும் நடத்திவரும் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

விலையை உயர்த்தினால் அந்தக் கோபத்தை மக்கள் எங்களிடம்தான் காட்டுகிறார்கள்.அதேசமயம் விலை உயர்வால் எங்களுக்கு எந்தப்பலனும் இல்லை.ஏற்கெனவே என்ன தரகு கொடுக்கிறார்களோ அதையேதான் இப்போதும் தருகிறார்கள்.அதுமட்டுமின்றி விநியோகத்திலும் தடை ஏற்படுத்தி எங்களுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று வருத்தப்பட்டுச் சொல்கிறார்கள்.

விலையை உயர்த்தியதைப் பற்றி யாரும் பேசாமல், தடையின்றிக் கிடைத்தால் போதும் என்கிற மனநிலைக்கு மக்களை ஆளாக்கவே,பெட்ரோல் டீசல் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்கள்.இது விலை உயர்வை மறக்க வைக்கும் சூழ்ச்சி என்றும் இதை ஒன்றிய அரசே திட்டமிட்டுச் செய்கிறது என்றும் சொல்கிறார்கள்.

– முருகன்

Leave a Response