தனிக்கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை?

2026 ஆம் ஆண்டு,ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்று சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது.

ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 9 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்குவது,இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,அதாவது 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அண்மையில் (மே 15,2026)சிபிஎஸ்இ,அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில்,இந்தக் கல்வியாண்டிலிருந்தே 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கியுள்ளது.இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை மீறியிருக்கிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,சிபிஎஸ்இயின் இந்த திடீர் அறிவிப்பு,பெற்றோர்களுக்கு,குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழகக் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில்,தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி,ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைக் கட்டாயமாக கற்கவேண்டும் என்றும்,அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்றும் சிபிஎஸ்இ தனது சமீபத்திய சுற்றறிக்கையில் கூறியுள்ளது.அதுவும் இது நடப்பு கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு புதியமொழியைக் கற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது,குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி,அவர்களின் மொத்தக் கல்வித்திறனையும் பாதிக்கச் செய்யும்.எனவே இந்தப் புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

அண்ணாமலையின்,இந்த திடீர் தற்காலிக இந்தி எதிர்ப்பு பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.சட்டமன்றத் தேர்தலின்போதே அவருக்கு அக்கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.அதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார்.

தேர்தலுக்குப் பிறகு கட்சியில் மாற்றம் வரும் அதன்மூலம் தனக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

இப்போதும் இன்றுவரை ஒரு அசைவும் இல்லை.

இதனால்,தமிழ்நாட்டில் தனியாகக் கட்சி தொடங்கலாம் என்கிற முடிவுக்கு அண்ணாமலை வந்திருப்பதாகவும் அதனாலேயே ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக இந்தி எதிர்ப்புக் கருத்தைப் பதிவிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response