இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைவர் – அதிரடி மாற்றம் வருகிறது

இந்திய ஒன்றிய அளவில் பா.ஜ.கவை எதிர்க்க 2023 ஆம் ஆண்டு இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.

காங்கிரசு தலைமையில் செயல்பட்டு வந்த இந்த அணியில் திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல், தேசியவாத காங்கிரசு சரத்பவார் கட்சி, சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைந்து செயல்பட்டு வந்தன.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி,டெல்லி தேர்தலுக்கு முன்புவரை இந்தியா கூட்டணியில் இருந்தது.ஆனால் டெல்லி தேர்தலில் காங்கிரசு,ஆம்ஆத்மி தனித்தனியாகப் போட்டியிட்டதால்,இந்தியா கூட்டணிக்கு பிரச்னை அடிப்படையில் ஆம்ஆத்மி ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையின் கீழ் இணைந்து போட்டியிட்ட காங்கிரசு,தேர்தல் முடிவு வந்த மறுநாளே விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

இதை, திமுக மட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ்யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் கடும் விமர்சனம் செய்தது.

இன்னொரு பக்கம், மேற்குவங்கத் தேர்தலில் எஸ்ஐஆர் மூலம், தான் தோற்கடிக்கப்பட்டதாக நம்பும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி,ஒன்றிய அரசில் இருந்து பா.ஜ.கவை வீழ்த்த இந்தியா கூட்டணி மீண்டும் பலப்பட வேண்டும்.அதற்கு தான் முன்நின்று வழிநடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

ஜூன் முதல் வாரத்தில் இந்தியா கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டி, ஒத்த கருத்துடைய பிற கட்சிகளையும் அதில் அழைக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால்,இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அதன் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல், சமாஜ்வாடி கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டம் குறித்து தங்களுக்குத் தகவல் இல்லை என்றும், மம்தா பானர்ஜி நேரடியாக அகிலேஷ் யாதவைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அதுபற்றித் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்துவிட்டு தேர்தல் முடிந்த பிறகு தவெகவுடன் கைகோர்த்த கோபத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரசுக் கட்சியிடமிருந்து தங்களுக்குத் தனித்தனி இருக்கைகளை ஒதுக்கக்கோரி திமுக கடிதம் எழுதியுள்ளது.இந்தநிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரசு இருக்கும் பட்சத்தில் திமுக அதில் நீடிப்பது கடினமான சூழலை ஏற்படுத்தக்கூடும்.

எனவே காங்கிரசுக் கட்சியை கழற்றிவிட்டு,பாஜவை எதிர்க்கும் திரிணாமுல்,திமுக,ஆம்ஆத்மி,பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி,இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணிக்கு புத்துயிரூட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அடுத்தாண்டில் (2027) உத்தரப்பிரதேசம்,பஞ்சாப்,கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்தத்தேர்தலில் காங்கிரசுக் கட்சியை வெளியேற்றி விட்டு,காங்கிரசு இல்லாத இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா கூட்டணியில் காங்கிரசை வெளியேற்றி விட்டு மம்தா தலைமை வகித்தால் இடதுசாரிகள் நிலைமை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மேற்குவங்கத்தில் அவர்கள் மம்தாவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்கள்.அதேசமயம் கேரளாவில் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்யும் இடதுசாரிகள் இந்தியா கூட்டணியில் காங்கிரசு தலைமையை ஏற்றது போல்,மம்தா தலைமையையும் ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதை எல்லாம் தவிர்க்க காங்கிரசை வெளியேற்றி விட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட இந்தியா கூட்டணிக்குத் தலைமை ஏற்கலாம் என்ற கருத்தும் தில்லி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

5 மாநில தேர்தல் குறித்து தில்லியில் மே 22 முதல் 24 வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் மத்தியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கூறுகையில்…

5 மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.ஆனால் மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மீதான காங்கிரசின் அணுகுமுறை அத்தகைய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு உகந்ததாக இல்லை.கேரள தேர்தல் பிரச்சாரத்தின் போது,மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜவுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருப்பதாக காங்கிரசு தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பல தீயநோக்கமுள்ள,ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும் என்று கூறியிருக்கிறார்.

இதனால்,இந்தியா கூட்டணியில் விரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுவது மட்டும் உறுதி என்கிறார்கள்.

Leave a Response