செந்தில்பாலாஜியை கைது செய்தே ஆகவேண்டும் என்கிற ஆசையில் மண் – விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டம்,ஊத்தங்கரை தொகுதி தவெக சமஉ இளையராஜாவிடம் குதிரைபேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள்,நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது,செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ,குதிரைபேரம் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி பேச்சுகள் பதிவு செய்யப்படவில்லை.சம்பவம் நடந்த இருநாட்களுக்குப் பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது.அரசைக் கவிழ்க்கச் சதி என யூகத்தின் அடிப்படையில் புகார் கூறியுள்ளார்.சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் அரசு கவிழாது.சபாநாயகருக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவளித்தனர். தற்போது சமஉக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.அசோக்குமார்தான் தூண்டினார் என குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால்,திருநாவுக்கரசு ஈரோட்டில் இருந்த நாளில் அசோக்குமாரும் இருந்தார் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.இருவரும் சந்தித்தார்களா,இல்லையா என்பதை வழக்கில் சொல்லவில்லை என வாதிட்டார்.

மேலும்,கரூர் சம்பவம் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில்,இடைத்தேர்தலில் கட்சிக்காகப் பணியாற்றுவதைத் தடுக்க வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எந்தப்பணமும் வழங்கவில்லை.மக்கள் பிரதிநிதியாக உள்ள நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அசோக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன்,எப்போதெல்லாம் சகோதரர் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறதோ,அந்த வழக்குகளில் அசோக்குமாரைச் சேர்த்து விடுகிறார்கள்.ஏற்கெனவே ஒரு செய்தியாளர் இது சம்பந்தமாக பேசியதாக புகாரில் கூறிய நிலையில்,அதுகுறித்து எந்தப்புகாரும் அளிக்கவில்லை.சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரமுடியாது.108 உறுப்பினர்கள் உள்ளனர்.35 கோடி குதிரை பேரம் என்பது யூகம்தான்.சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்கமுடியாது என வாதிட்டார்.

மேலும்,திமுகவுக்கு 59 சமஉக்கள்,அதிமுகவுக்கு 47 சமஉக்கள் உள்ளனர்.ஆனால் ஆளும் தவெகவுக்கு காங்கிரசு, வி.சி.க.,இரண்டு கம்யூனிஸ்டுகள் என எல்லாரும் ஆதரவாக உள்ளனர்.59 பேர் உள்ள திமுக எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன்,குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் இருவர் கரூரைச் சேர்ந்தவர்கள்.புலன்விசாரணையில்,குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜூன் 25,26,27-ஆம் தேதிகளில் கிண்டி தனியார் ஓட்டலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.திருநாவுக்கரசு,வேறு காரணத்துக்காக புகார்தாரரான சமஉ இளையராஜாவுடன் பேசியதாகக் கூறியுள்ளார்.குற்றச்சதிக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.விசாரணைக்கு ஆஜராக செந்தில்பாலாஜிக்கும்,அசோக்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.ஆனால் இருவருமே ஆஜராகவில்லை. இது சாதாரணமான வழக்கல்ல.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை அணுகியுள்ளனர்.அசோக்குமார் தொடர்பு உள்ளதற்கு ஆரம்பகட்ட ஆராதங்கள் உள்ளன.ஹவாலா பணம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது.புலன்விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது எனத் தெரிவித்து இருவருக்கும் முன்பிணை வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன்,குதிரைபேர வழக்கில் செந்தில்பாலாஜி,அசோக்குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி உத்தரவிட்டார்.தினமும் காலை, மாலை காவல்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராகவேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

இதன்மூலம்,செந்தில்பாலாஜியைக் கைது செய்தே ஆகவேண்டும் என்கிற ஆசையில் மண் விழுந்துவிட்டது என்கிறார்கள்.

Leave a Response