
விஜய் ஆட்சி மீது,சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும்போது,அரசுக்கு எதிராக
வாக்களித்தால் ரூ.35 கோடி தருவதாக திமுகவினர் தன்னிடம் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக சமஉ இளையராஜா,சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தார்.ஆட்சியைக் கவிழ்க்க
பெருநிறுவனம் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, யூ-டியூபர் திருநாவுக்கரசு உட்பட 9 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில்,ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்தின்
பின்னணியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து,இந்த வழக்கில் அவர்களும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.கரூர் மாவட்டம்
இராமேசுவரப்பட்டியில் உள்ள அவர்களது பூர்வீக இல்லத்தில்,தந்தை வேலுச்சாமியிடம் காவல்துறையினர் அழைப்பாணை வழங்கினர்.
அதன்படி,திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு இருவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால்,அவர்கள் இருவரும் நேற்று ஆஜராகவில்லை.
அவர்களது கைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்களும் வரவில்லை.
இதையடுத்து, இருவருக்கும் மீண்டும் அழைப்பாணை அனுப்பலாமா? அல்லது வேறு சட்டநடவடிக்கைகளை
மேற்கொள்ளலாமா? என்று ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இருவரும் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுக்க ஏற்கெனவே அனைத்து விமான
நிலையங்களுக்கும்‘லுக்-அவுட்’ அறிவிக்கை அனுப்பியுள்ளனர்.அதோடு,கடந்த 6 நாட்களாக கரூரில் முகாமிட்டுள்ள சென்னை தனிப்படை காவல்துறையினர், தற்போது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை,திருச்சி,கோவை மட்டுமின்றி, அண்டைமாநிலங்களான கேரளா,ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா,
புதுச்சேரியிலும் சந்தேகப்படும் இடங்களில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
இதனால்,இருவரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம்,குதிரை பேர புகார் தொடர்பான வழக்கில் முன்பிணை கோரி அசோக்குமார் சென்னை
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிபதி சி.குமரப்பன் முன்பு இந்த மனு நேற்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில்,ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இந்த வழக்கில்
மிகத்தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன.எனவே,இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் தேவை.
மேலும்,இதில் சமஉ செந்தில்பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதால்,பாமஉ மற்றும் சமஉக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு இந்தவழக்கை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி,முன்பிணை வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு பட்டியலிட உத்தரவிட்டு,
விசாரணையை நாளைக்குத் (ஜூலை 8) தள்ளிவைத்தார்.அதன்படி,பாமஉ,சமஉக்கள் மீதான வழக்குகளை
விசாரிக்கும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
அதற்கு முன்பாக இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


