
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன்.இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
ஜூன் 20 ஆம் தேதி ஆத்தூரில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழா திமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் அடிப்படையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் நகர தவெக செயலாளர் செல்வமுருகன்,முதல்வர் விஜய்யை, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஒருமையில் பேசியதாக காவல்துறையில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்தனர் ஆத்தூர் காவல்துறையினர்.இந்த வழக்கில் முன்பிணை கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த முன்பிணை மனுவை நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் அனிதா ராதாகிருஷ்ணன்,ஆத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்தார்.பின்னர் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஆத்தூர் பேரூராட்சி அலுவலகப் பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு காலை 11.50 மணிக்கு ஆத்தூர் ஆய்வாளர் ரென்னிஸ் தலைமையில் புகுந்த காவல்துறையினர், அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்வதாக தெரிவித்தனர்.
அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன், தனது வக்கீல் வந்ததும் வருகிறேன் எனக்கூறி அவரது மகிழுந்தில் ஏறினார். ஆனால் ஆய்வாளர் ரென்னிஸ்,அனிதா ராதாகிருஷ்ணனை இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அனிதா ராதாகிருஷ்ணனிடம் மதியம் 12.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில் துணை காவல்காண்காணிப்பாளர் தீபு தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.அந்த அலுவலக 2 ஆவது மாடியில் உள்ள தனி அறையில் வைத்து இந்த விசாரணை நடந்தது.இதையொட்டி அந்த அலுவலகத்தின் இருவாயில்களும் மூடப்பட்டன.அனைவரும் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மாலை 6.30 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணையை முடித்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல் வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது அங்கிருந்தபடியே பேட்டியளித்த அனிதா ராதாகிருஷ்ணன்…
என்னைக் கைது செய்து அழைத்துச் சென்று எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு போலீசார் கட்டாயப்படுத்தினர்.அது நடக்காது.எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறோம்.உடனடியாக தவெகவில் இணையுமாறு போலீசார் கட்டாயப்படுத்தினர்.ஒரு கொம்பனாலும் என்னை தொட்டுப் பார்க்கமுடியாது.நான் தவறு செய்யவில்லை.தவறு செய்யாத என்னை பொய்வழக்கு போட்டு ஒரு காலமும் அடக்கமுடியாது.எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்.10 ஆம் தேதி ஆத்தூர் போலீசில் ஆஜராவதாக கடிதம் கொடுத்துள்ளேன். அதற்குள் என்னை கைது செய்துள்ளனர்.நான் மு.க.ஸ்டாலின் வழி நடப்பேன்,திமுகவில்தான் நீடிப்பேன்.என்ன விலைக்கு வாங்கமுடியாது.நான் ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன் என ஆவேசமாக பேட்டியளித்தார்.
அப்போது அந்த அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள்,காவல்துறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.இதையடுத்து,அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 9.40 மணி வரை மருத்துவ பரிசோதனை நடந்தது.
அதன்பின்னர் இரவு 9.45 மணி அளவில்,அரசு மருத்துவமனையில் இருந்து திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்,
திமுக தலைவர் ஸ்டாலின் தைரியமாக இருக்கச் சொல்லியிருக்கிறார்.எதற்கும் அச்சப்படமாட்டேன்.உடனடியாக என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தால்தான் பயப்படுவார் எனக் கூறியதாலேயே இந்தக் கைது நடவடிக்கை நடந்திருக்கிறது.இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரால் (தவெக சரவணன்) லாட்டரி சீட்டு வியாபாரமும்,கஞ்சா வியாபாரமும் நடக்கிறது.அதைத் தட்டிக்கேட்க இந்த அரசிற்கு திராணி இல்லை.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மீது ஆணையாகச் சொல்கிறேன்.தவெக குதிரை பேரம் எங்களிடம் நடக்காது.இன்னும் ஆறுமாத காலத்தில் இந்த ஆட்சி இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.


