
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில், திருச்சி உறையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது.
அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மு.வீரபாண்டியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது….
தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பிரச்சினை மக்களை வாட்டி வதைக்கிறது.விவசாயிகளும் தண்ணீரின்றி பாதிக்கப்படுகிறார்கள்.எனவே,கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
விவசாயக் கடன்களை தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும்.தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு காலஅவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால்,சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதிலும்,பெண்கள்,குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளக்கூடாது.சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.
அனைத்து அரசியல்கட்சிகளும்,தமிழ்ச் சமூகமும் குற்றங்களைத் தடுக்க சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக இல்லாமல்,குற்றங்களை எதிர்த்து நிற்கும் சமூகமாக மாறவேண்டும்.
தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மதுரையில் ஆய்வுக்கூட்டம் நடத்தியது,நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. ஆளுநரின் வேலை இதுவல்ல.அவரது செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.அவர்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது சவாரி செய்யக்கூடாது.
விலைவாசி உயர்வுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதிவரை நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்வது,16 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது,செப்டம்பர் 1 ஆம் தேதி புதுடெல்லியில் 2 இலட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணியை நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.இதில் பங்கேற்பதற்காகத் தமிழகத்திலிருந்து இரண்டு தொடர்வண்டிகளில் கட்சியினர் டெல்லிக்கு செல்லவுள்ளனர்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு,மனிதாபிமான அடிப்படையில் த.வெ.க அரசு, அரசு வேலை வழங்குவதை வரவேற்கிறோம்.
மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக இருக்கக்கூடாது. அங்கு அணை கட்டுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கும்.இரு மாநில உறவுகளையும் பாதிக்கும்.
முதலாளித்துவ சமூகத்தில் குதிரைபேர அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.எனவே,ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் இடதுசாரிகள் பக்கம் திரும்பவேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதில்,கரூர் கொடுநேர்ச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுவேலை எனும் கருத்துக்காக தவெக அரசு மீது பலரும் விமர்சனம் வைத்துவரும் நேரத்தில் மு.வீரபாண்டியன் அதை வரவேற்றிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.


