
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார்.
அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:
இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும்
வணக்கம்
பாஜக அரசின் தவறான அணுகுமுறையால் இந்தியாவின் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ளது.அடுத்தடுத்து நடந்து வரும் பேப்பர் லீக் காரணமாக தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுகின்றன.இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளன.இதனால் இலட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு பாஜக அரசில் எவருமே பொறுப்பேற்கவில்லை.இதற்கு பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மௌனமாக இருக்கிறார்.இதன்காரணமாக மாணவர்கள் இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தி உள்ளனர். இது அரசியல் கட்சிகள் அனைவருக்கும் எச்சரிக்கை மணியாகும்.இளைஞர்களுடைய பிரச்சனைகளுக்காக நாம் தெருவில் இறங்கி போராடாத காரணத்தினால் தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.இளைஞர்களின் குரலை வெளிப்படுத்துகிற காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை நாம் எதிர்நிலையில் வைத்து பார்க்கக்கூடாது.அவர்கள் எழுப்பும் பிரச்சனைகளை இன்னும் விரிவான தளத்தில் இந்தியா கூட்டணி முன்னெடுக்கவேண்டும்.அதற்காக நாடு தழுவிய போராட்டங்களை நாம் அறிவிக்கவேண்டும்.
நரேந்திர மோடி அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையால் இப்போது நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதை எப்படி சமாளிப்பது என தெரியாத பிரதமரோ மக்களெல்லாம் சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுரை சொல்கிறார்.கோவிட் காலத்தில் எப்படி திறமையற்ற இந்த அரசால் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தார்களோ அதேபோல இப்போதும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.இதை அம்பலப்படுத்தி நாடு தழுவிய அளவில் நரேந்திரமோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும்.
இந்தப் போராட்டங்களை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரசுக் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளா,மேற்குவங்கம்,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்தக்கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது.இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரசுக் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்.இயல்பாகவே தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையே முரண்களும் இருக்கும்.அவற்றை கூர்மைப்படுத்தக்கூடாது.அந்தப் பொறுப்பு மாநிலக் கட்சிகளுக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகளுக்கும் உள்ளது.
இப்போது மத்திய மாநில உறவுகள் மிக மிக சீர்கேடு அடைந்துள்ள சூழலில் தேசியக்கட்சிகள் கூட்டாட்சி என்ற அடிப்படையில் தங்களது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்கவேண்டும்.. இதன் ஒரு அங்கமாக ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மும்மொழிக் கொள்கையைப் பற்றி தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கூட்டணி எடுக்க வேண்டும்.
அதுபோலவே மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நீதிபதி குரியன் ஜோசப் ஆணையம் முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் இந்தியா கூட்டணி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.


